டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாஜக தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்ளூர் மக்கள் இந்த பிரச்னைக்கு ‘புல்டோசர் நீதி’ வேண்டும் என வலியுறுத்திய நிலையில் இளம் பணியாற்றிய பாஜக தலைவரின் மகனுக்கு சொந்தமான ரிசார்ட் இரவோடு இரவாக புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் குற்றங்கள் நடைபெறும்போது அம்மாநில அரசு குற்றவாளிகளின் குடியிருப்புக்களை புல்டோசர் கொண்டு இடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறது.
புகார்
உத்தரகாண்ட் மாநிலத்தின் பாவரி மாவட்டத்தில் யம்கேஷ்வர் தொகுதியில் ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இது அப்பகுதி பாஜக தலைவராக உள்ள வினோத் ஆர்யாவின் மகனான புல்கித் ஆர்யாவுக்கு சொந்தமானதாகும். இதில், 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் ரிஷப்ஷனிஸ்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவ்வாறு இருக்கையில் கடந்த 18ம் தேதி தனது மகளை காணவில்லையென இளம்பெண்ணின் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணை
அதேபோல ரிசார்ட் சார்பாகவும் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரையடுத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் வெளியில் தீவிர விசாரணையும், புல்கித் ஆர்யாவிடம் கடமைக்கு விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது. புல்கித் ஆர்யா உள்ளூரில் செல்வாக்குள்ள நபரின் மகன் என்பதால் விசாரணையில் இந்த பின்னடைவு இருந்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் ஒரு சில நாட்களிலேயே சமூக வலைத்தளங்களில் வெளியே கசிய தொடங்கியுள்ளது.
சிசிடிவி
இதனையடுத்து உள்ளூர் மக்களின் அழுத்தம் காரணமாக ரிசார்ட்டின் சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் சோதனை செய்தபோது சில உண்மைகள் வெளிவந்துள்ளன. அதாவது சம்பவம் நடந்த அன்று இளம்பெண் ரிசார்ட்டை விட்டு வெளியே வரவில்லை. எனவே முழு சந்தேகமும் ரிசார்ட் மீது திரும்பியது. இதனையடுத்து ரிசாரட் ஊழியர்களிடம் விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம்பெண்ணை தனது ஆசைக்கு இனங்க அழைத்ததாகவும், ஆனால் அப்பெண் மறுத்ததால் கடத்தப்பட்டதாகவும் ஊழியர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடத்தி கொலை
மேலும் கடத்தப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டதாகவும். இதில் புல்கித் ஆர்யாவின் பங்கு முக்கியமானது என்றும் ஊழியர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து புல்கித் ஆர்யா உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் மக்கள் ‘புல்டோசர் நீதி’ வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். அந்த பகுதிகள் மக்கள் ஒன்றிணைந்து ரிசார்ட் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கைது
இதனையடுத்து சர்ச்சைக்குள்ளான ரிசார்ட்டை இடிக்க அம்மாநில முதலமைச்சர் தாமி உத்தரவிட்டுள்ளார். உத்தரவையடுத்து ரிசார்ட் நேற்றிரவு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இளம்பெண்ணின் உடல் கிடைக்காத நிலையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். குற்றவாளிகள் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உத்தரவு
அதில், மாநிலம் முழுவதும் உள்ள ரிசார்ட்டுகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சட்டவிரோத ரிசார்ட்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுகு்க வேண்டும் என்றும், இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற கொடூர குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் தாமி கூறியுள்ளார்.