காந்திநகர் : சுற்றுச்சூழல் என்ற பெயரில் வளர்ச்சித் திட்டங்களை தடுக்கும் அர்பன் நக்சல்களுக்கு நீதித்துறை ஆதரவு கிடைத்துவிடுவதாகவும், மாநில அமைச்சர்கள் வளர்ச்சித் திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களுக்கான தேசிய மாநாடு குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் இருக்கும் ஏக்தா என்ற நகரில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி இந்த மாநாட்டை காணொலி மூலமாக தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அவர், “அரசின் திட்டங்களை எதிர்ப்பவர்களுக்கும் நகர்புற நக்சல்களுக்கும் அரசியல் கட்சிகள் சில ஆதரவு தெரிவித்து வருகின்றன. அர்பன் நக்சல்கள் குஜராத் மாநிலம் சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டத்துக்கு அர்பன் நக்சல்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அர்பன் நக்சல்கள்
சுற்றுச்சூழலை பாதிக்கும் என்று கூறி அர்பன் நக்சல்கள் சர்தார் அரோவர் அணை கட்டும் திட்டத்துக்கு தெரிவித்த எதிர்ப்பின் காரணமாக அரசுக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. ஆனால், தற்போது அணை கட்டப்பட்டு அதை சுற்றி இருக்கும் பகுதிகள் வளர்ச்சியடைந்துள்ளன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு இது சொர்க்கமாகி இருக்கிறது.
போலி பிரச்சாரம்
அர்பன் நக்சல்களின் பிரச்சாரம் எந்த அளவுக்கு போலியானவை என்பது இதன் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனை மக்களால் உணர முடியும். அர்பன் நக்சல்களுக்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து அரசியல் கட்சிகளிடம் இருந்து நிதி கிடைக்கிறது. அவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதாக கூறிக் கொண்டு வளர்ச்சித் திட்டங்களை தடுக்கின்றனர்.
நீதித்துறை ஆதரவு
நீதித்துறை மற்றும் உலக வங்கியின் ஆதரவையும் அர்பன் நக்சல்கள் எளிதில் பெற்றுவிடுகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் செய்யும் பிரச்சாரங்களால் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் திட்டங்கள், மக்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் திட்டங்கள் தடைபட்டுவிடாமல் அமைச்சர்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ச்சித் திட்டங்கள்
வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த மாநிலங்களில் விரைவாக ஒப்புதல் வழங்கப்படுவது கிடையாது. 6,000க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறது. திட்டங்கள் விரைவாக செயல்பட்டாலே வளர்ச்சியை உறுதிபடுத்த முடியும். நகர்புற நக்சல்களின் சதிகளில் சிக்கிவிடக்கூடாது.” என்றார்.