IND v AUS: கடிவாளம் போட்ட அக்ஸர், எகிறி அடித்த ரோஹித்; 8 ஓவர் போட்டியில் இந்தியா சாதித்தது எப்படி?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்று நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டி20ஐ போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது.

மைதானம் ஈரப்பதத்துடன் இருந்ததால் 2.30 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு போட்டி தொடங்கியது. தாமதத்தால் ஆட்டம் 8 ஓவர்களாகக் குறைக்கப்பட்டிருந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியிருந்தார். புவனேஷ்வருக்குப் பதில் ரிஷப் பண்ட் இடம்பிடித்தார். ஆஸ்திரேலியா அணியில் இரண்டு மாற்றங்கள் இருந்தன. அபாட் மற்றும் சாம்ஸ் ப்ளேயிங் லெவனின் இடம்பிடித்திருந்தனர்.

8 ஓவர் போட்டி என்பதால் க்ரீஸூக்கு வந்த முதல் பந்திலிருந்தே பேட்டர்கள் அடித்து ஆடப்போகிறார்கள் என்பது தெரிந்ததுதான். பாண்டியா வீசிய ஆட்டத்தின் முதல் பந்தில் சின்ன ஸ்விங் தென்பட்டது. அடுத்த பந்தில் ஸ்கூப் ஆடி அதிரடியை ஆரம்பித்தார் பின்ச். முதல் ஓவரில் 10 ரன்கள் எடுத்தனர். அக்ஸர் வீசிய அடுத்த ஓவரில் கீரின் ரன் அவுட் ஆனார். மேக்ஸ்வெல் வந்த முதல் பந்தில் போல்டானார். இரண்டு ஓவர்கள் பவர் ப்ளேயில் 19 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. அக்ஸர் வீசிய அடுத்த ஓவரில் டிம் டேவிட் போல்டானார்.

அக்ஸர் படேல்

அக்ஸர் 2 ஓவர்களில் 13 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்தார். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ பின்ச் மட்டும் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து பும்ரா பந்தில் போல்டானார்.

பின்னர் வேட் தன் அதிரடியால் ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 20 பந்துகளில் 43 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலிய அணி 8 ஓவர்கள் முடிவில் 90 ரன்களை எடுத்திருந்தது. சேஸிங்கைத் தொடங்கிய இந்திய அணியிலும் அதிரடிக்குப் பஞ்சமில்லை. முதல் ஓவரிலேயே 20 ரன்கள் வந்தன. பவர்ப்ளேயில் மட்டும் இந்திய 30 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் ஜாம்பா ராகுல், கோலி, சூர்யகுமார் என மூன்று பேட்டர்களையும் அவுட்டாக்கினார். ஆனால், மற்ற பௌலர்களால் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எப்படி வேட் ஆடினாரோ அதைவிட சிறப்பாக இந்திய அணிக்காக ரோஹித் ஷர்மா பேட்டிங் செய்தார். பந்துகளுக்கு ஏற்ற வகையில் ஷாட்களை ஆடினார். இறுதிவரை களத்தில் இருந்த ரோஹித் 20 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார்.

ரோஹித் சர்மா

இந்திய அணியில் ஹர்ஷல் படேல் தனது பலமான ஸ்லோயர் பந்துகளில் இந்த முறை ரன்களை விட்டுக்கொடுத்தார். வேட் சென்ற போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் அந்த ஸ்லோயர் ஷார்ட் பிட்ச் பந்துகளை சிக்ஸர்களுக்கு விரட்டினார். ஆஸ்திரேலியா அணி பௌலிங்கில் அதிகப்படியான ஸ்லோயர் பந்துகளை உபயோகித்தனர். அது அவர்களுக்கு பலன் தரவில்லை. ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளையும் வீசினர். இது ரோஹித் தனது ஆதர்ச புல் ஷார்ட்களை ஆட வழி செய்தது.

இரு அணியிலும் ஸ்பின்னர்களான அக்ஸர் மற்றும் ஜாம்பா சிறப்பாகப் பந்து வீசினர். அக்ஸரின் 6.5 ரன்கள் என்ற எக்கனாமி ஆஸ்திரேலியா அணிக்குக் கூடுதல் ரன்கள் சேர்க்கும் வாய்ப்பை தவிர்த்தது. இந்தப் போட்டி குறைந்த ஓவர்கள் மட்டும் நடைப்பெற்றதால் பௌலர்கள் எக்கனாமி என்பது 10 ரன்களுக்கு மேல் இருக்கும் என்பது அனைவரும் யூகித்ததுதான்.

இந்திய அணி சேஸிங் செய்யும் போது சிறப்பாகவே செயல்படுகின்றனர் அதில் துளியும் சந்தேகமில்லை. ஆனால், ஸ்கோரை டிஃபண்ட் செய்வதில் இன்னமும் தடுமாறுகின்றனர். இந்தப் போட்டியில் சில பாசிட்டிவ் அம்சங்கள் உள்ளன. இதே போட்டியை டார்கெட்டை டிஃபண்ட் செய்து வென்றிருந்தால் இந்திய அணியின் பலம், பலவீனங்கள் குறித்து இன்னும் ஒரு தெளிவான பார்வை கிடைத்திருக்கும். ஆயினும், வெற்றி என்பது வெற்றிதான்.

Team India

இப்போது 1-1 என தொடர் சமநிலையை அடைந்திருக்கிறது. இதன்மூலம் ஹைதராபாத்தில் நடக்கவுள்ள கடைசிப் போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்திய அணி அந்தப் போட்டியை டிஃபெண்ட் செய்து தொடரைக் கைப்பற்றினால் இன்னும் கூடுதல் சிறப்பானதாக அமையும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.