வாட்ஸ்அப் கால், ஜூம் உள்பட பல இன்டர்நெட் அழைப்புகளுக்கு தற்போது கட்டணங்களை நுகர்வோர்கள் செலுத்துவதில்லை என்பது தெரிந்ததே. இன்டர்நெட் இணைப்பு இருந்தால் மட்டும் போதும், ஆடியோ வீடியோ அழைப்புகளை இலவசமாக பெறலாம்.
இந்த நிலையில் வாட்ஸ்அப் கால், ஜூம் உள்பட அனைத்து இன்டர்நெட் அழைப்புகளையும் தொலைத்தொடர்பு துறையின் கீழ் கொண்டுவர புதிய மசோதா இயற்றப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக வாட்ஸ்அப், ஜூம் உள்பட அனைத்து இன்டர்நெட் சேவை நிறுவனங்களும் மத்திய அரசிடம் லைசென்ஸ் எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜீன்பிங் கைது, சீனா-வில் நடப்பது என்ன..? இந்தியாவுக்குப் பெரும் பாதிப்பு..!
தொலைத்தொடர்புத்துறை
அழைப்பு மற்றும் செய்தியிடல் சேவைகளை வழங்கும் வாட்ஸ்அப், ஜூம், கூகுள் டியோ போன்ற சேவைகள் இந்தியாவில் செயல்பட உரிமங்கள் தேவைப்படும் நிலை வரலாம் என்றும், இவை அனைத்தும் தொலைத்தொடர்பு சேவைகளின் வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய மசோதா
தகவல் தொடர்பு சேவைகள், இணைய அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகள் மற்றும் ஒளிபரப்பு சேவைகளை உள்ளடக்கிய தொலைத்தொடர்பு சேவைகளின் வரையறையை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை ஒழுங்குபடுத்துவதற்கான கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த புதிய மசோதா நிறைவேற்றப்படும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.
KYC விதிமுறை
அனைத்து இணைய அழைப்பு மற்றும் செய்தியிடல் பயன்பாடுகளும் தொலைத்தொடர்பு உரிமத்தின் கீழ் வரும்போது KYC விதிமுறையின் கீழ் வரவேண்டும் என்று புதிய மசோதாவில் கூறப்படும். இதனால் பயனர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும், அழைப்பை யார் செய்கிறார்கள் என்பதை நுகர்வோர் அறிந்து கொள்ள முடியும் என்றும் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி தெரிவித்தார்.
புதிய மசோதாவின் நோக்கம்
வெவ்வேறு தளங்களில் இருந்து செயல்படும் ஒவ்வொரு தளமும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறையின் கீழ் வர வேண்டும் என்பதே இந்த புதிய மசோதாவின் நோக்கம் ஆகும். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பின் செயல்முறையாக இருக்கும் என்றும் அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்தார்.
சிறைத்தண்டனை
மேலும் தொலைத்தொடர்பு சேவைகளை பெறுவதற்கு தவறான அடையாளத்தை கொடுத்தால் ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்க புதிய மசோதா முன்மொழிகிறது. அதேபோல் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கு தற்போது விதிக்கப்படும் ரூ.50 கோடி என்ற அதிகபட்ச அபராதத்தை ரூ.5 கோடியாக குறைக்கவும் இம்மசோதா முன்மொழிகிறது.
புதிய மசோதா எப்போது?
தொலைத் தொடர்பு துறையின் புதிய மசோதா அடுத்த 6 அல்லது 10 மாதங்களுக்குள் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு அனைத்து தரப்பு ஆலோசனையும் பெற்று அதன் பின் இந்த மசோதா இறுதி செய்யும் என்றும் நாடாளுமன்ற குழுக்களின் பரிசீலனைக்கு பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
New Govt Bill: WhatsApp, Zoom, Skype May Soon Need Telecom Licence?
New Govt Bill: WhatsApp, Zoom, Skype May Soon Need Telecom Licence? | புதிய தொலைத்தொடர்பு மசோதா.. வாட்ஸ் அப் கால், ஜூம் அழைப்புகளுக்கு ஆப்பு?