திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தரிசனத்திற்காக வைகுண்டம் காம்பளக்ஸ்சில் காத்திருக்கின்றனர். இங்கு சுற்றுப்புறத்தின் வெளியே உள்ள பூங்கா நன்கொடையாளர்கள் மூலம் ரூ.70 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா மற்றும் தலைமை செயல் அதிகாரி தர்மா ஆகியோர் இணைந்து நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:
வைகுண்டம் பூங்கா பசுமையாக இருக்கவேண்டும் என பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு 9 நாட்கள் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த பிரமோற்சவ விழாவை காண வரும் பக்தர்களுக்காகவும், வரிசையில் சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் வைகுண்டம் காத்திருப்பு அறையில் இருக்கும்போது பசுமையுடன் கூடிய ஆன்மீக சிந்தனையை கூட்டும் விதமாக இந்த பூங்கா புதுப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெகன்மோகன் 27ம் தேதி பிரமோற்சவத்தின் கொடியேற்றத்தின் போது மாநில அரசின் சார்பில் பட்டுவஸ்திரங்களை சமர்ப்பிக்க வர உள்ளார். அப்போது, நன்கொடையாளர்கள் மூலம் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கைகளை எண்ணுவதற்காக கட்டப்பட்ட பரக்காமணி கட்டிடத்தையும், பத்மாவதி விருந்தினர் மாளிகை புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில் திறந்து வைக்க உள்ளார். திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் பயன்பாட்டிற்கு டீசல் மற்றும் பெட்ரோல் இல்லாமல் பேட்டரி பஸ்கள் இயக்க மாநில அரசு முடிவு செய்தது. இதனை முதல்வர் வரும் 27ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.
16 மணிநேரம் காத்திருப்பு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பிறப்பையொட்டி தற்போது பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று 65,158 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 28,416 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் ரூ.4.44 கோடியை காணிக்கையாக செலுத்தினர். இந்நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று காலை திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் 29 அறைகள் நிரம்பியுள்ளது. இலவச தரிசன வரிசையில் 16 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.