தெஹ்ரான்: ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த சமூக வலைதளங்கள் முடக்கப்பட்ட நிலையில், ஈரானில் தனது ஸ்டார்லிங்க் செயற்கைகோள் இணைய சேவையை வழங்கும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஈரானில் கடந்த 8 நாட்களாக ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது. ஈரானில் 80 நகரங்களில் கட்டாய ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் இரவு பகலாக தொடர்கிறது. போராட்டத்தில் இளம் பெண்கள், இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றுள்ளனர். இதுவரை இப்போராட்டத்தில் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சூழலில் ஈரானில் போராட்டத்தை கட்டுப்படுத்த இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில், ஈரான் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துள்ள அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது. மேலும், ஈரான் மக்கள் இணைய சேவையை பயன்படுத்த அமெரிக்கா தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்கத் தொழிலதிபரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் தனது இணைய சேவை செயற்கைகோளான ஸ்டார் லிங்க்-கின் பெயரை ட்விட்டரில் குறிப்பிட்டு ”ஸ்டார் லிங்க் செயல்படும்” என்று பதிவிட்டிருக்கிறார். இதன்மூலம் ஈரான் மக்கள் இணைய சேவையைத் தடையின்றி பெற முடியும் எனத் தெரிகிறது.
முன்னதாக, ஈரானின் மேற்கில் அமைந்துள்ளது குர்திஸ்தான் மாகாணம். இங்குள்ள சஹிஸ் நகரைச் சேர்ந்த மாஷா அமினி (22) கடந்த 13-ம் தேதி தலைநகர் டெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றஞ்சாட்டி கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார். இதில் கோமா நிலைக்குச் சென்ற அவர் மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாபுக்கு எதிரான போராட்டம் தீவிர நிலையை அடைந்தது குறிப்பிடத்தக்கது.