உத்தரப்பிரதேச மாநிலம், ரேபரேலியில் ICSE வாரியத்துடன் இணைக்கப்பட்ட தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் யாஷ் சிங் என்ற மாணவர் 7-ம் வகுப்பு படித்துவந்தார். சிறு கிராமத்தைச் சேர்ந்த யாஷ் சிங் தன்னுடைய மாமா வீட்டில் தங்கிப் படித்துவந்தார். இந்த நிலையில், சமீபத்தில் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு தொடங்கியிருக்கிறது. அதில் உயிரியல் தேர்வில் மாணவர் யாஷ் சிங் பார்த்தெழுதியதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்டறிந்த ஆசிரியை மோனிகா மார்கோ, முதல்வர் ரஜினி டிசோசா ஆகியோர் அவரைக் கண்டித்து தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அதன் பிறகு வீட்டுக்குவந்த யாஷ் சிங், அவர் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று கதவைக் தாழிட்டுக்கொண்டார். மாலை 3 மணியளவில் யாஷ்-ன் மாமா மௌரியா கதவைத் தட்டியும் அவர் கதவை திறக்காததால், கதவை உடைத்தபோது யாஷ் சிங் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். உடனே தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறையினர், “சிறுவன் யாஷ் சிங் ஆசிரியர்கள் தாக்கியதால் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியை, பள்ளி முதல்வர்மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. யாஷ் சிங் அறையில் ஒரு தற்கொலைக் குறிப்பும் கிடைத்திருக்கிறது.
அதில், `நான் உயிரியல் பரீட்சையில் மோசடி செய்திருக்கிறேன். அதனால் நான் இன்று சாகப்போகிறேன். இது தொடர்பாக என் மாமா- அத்தை – அப்பா, அம்மாவைக் குறை சொல்லாதீர்கள். தவறு செய்யும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். என் தவற்றுக்காக நான் அழுகிறேன். நான் மிகவும் வெட்கப்படுகிறேன். என்னால் என் மனதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மிகவும் மோசமான எண்ணங்கள் தோன்றுகின்றன.
அனைத்து குழந்தைகளுக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த கடிதக் குறிப்பு கையெழுத்து நிபுணர்களுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தனர்.