தாம்பரம்: கூடுவாஞ்சேரி, அம்பேத்கர் நகர், பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் சந்திரா (73). இவர், கடந்த 20ம் தேதி அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் இல்லை. இந்நிலையில், அன்றைய தினம் கூடுவாஞ்சேரி-ஊரப்பாக்கம் இடையே மின்சார ரயிலில் அடிபட்டு ஒரு மூதாட்டி இறந்து கிடப்பதாக தெரிந்தது. இதையறிந்த உறவினர்கள், விரைந்து சென்று பார்த்தபோது, இறந்தது சந்திரா என தெரிந்தது.
தகவலறிந்து தாம்பரம் ரயில்வே போலீசார் சென்று மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து, இறுதி சடங்கு செய்யப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டது. மறுநாள் (21ம் தேதி) சந்திரா வீட்டுக்கு வந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். சந்திரா, உயிருடன் இருப்பதால் அடக்கம் செய்யப்பட்டவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அடக்கம் செய்த மூதாட்டியின் சடலத்தை தோண்டு எடுத்து தருமாறு தாம்பரம் வருவாய் கோட்டாட்சியரிடம் தாம்பரம் ரயில்வே போலீசார் மனு அளித்தனர். பின்னர் மூதாட்டியின் உடலை வண்டலூர் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், ரயிலில் அடிபட்டு இறந்த மூதாட்டி, பல்லாவரம் அருகே திரிசூலம், கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்த பத்மா (55) என நேற்று தெரியவந்தது. உடனே பத்மாவின் உறவினர்களிடம் தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.