பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வளர்ந்த கதையும், சோதனையின் பின்னணியும்!

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை செப்டம்பர் 22-ம் தேதி காலை, நாடு தழுவிய அளவில் பெரும் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டது. நாடு தழுவிய அளவில் இத்தகைய மாபெரும் சோதனை நடப்பது இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடதக்கது. இந்தச் சோதனையில், தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள், தலைவர்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ), அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி 100-க்கும்  மேற்பட்ட நிர்வாகிகளைக் கைதுசெய்தனர். இந்த மெகா சோதனையில், தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளித்தல், பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தல், தடை செய்யப்பட்ட இயக்கங்களில் இணையும்படி மக்களைத் தூண்டுதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் வசிக்கும் இடங்கள் அலுவலகங்களும் அடங்கும். சோதனை நடந்த கேரளா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, டெல்லி, பீகார் ஆகிய மாநிலங்களில் கேரளாவில்தான் அதிக கைது பதிவாகியிருக்கிறது.

‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ அலுவலகத்தில் என்.ஐ.ஏ ரெய்டு…

கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தின் திண்டுக்கல்லில் 50-க்கும் மேற்பட்ட பி.எஃப்.ஐ உறுப்பினர்கள் கூடி திண்டுக்கல் அலுவலகத்துக்கு எதிரில் போராட்டம் நடத்தினர். சென்னை புரசைவாக்கத்தில் இருக்கும் மாநிலத் தலைமை அலுவலகத்தில் நடந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிகளில் மறியல் போராட்டம் நடந்தது. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு குறித்தும் அது வளர்ந்த விதம் குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

PFI என்றால் என்ன?

`பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ என்பது இந்தியாவில் செயல்படும் ஓர் இஸ்லாமிய அமைப்பாகும். 2006-ல் நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரன்ட் என்ற அமைப்பு` பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் புதிய அமைப்பாக மாறியது. பின்னர் தமிழகத்தில் மனித நீதிப் பாசறை, கர்நாடகத்தில் கர்நாடக கண்ணிய மன்றம், கோவாவில் குடிமக்கள் மன்றம், ராஜாஸ்தானில் கல்வி மற்றும் சமுதாயச் சமூகம், மேற்கு வங்கத்தில் நகரிக் அதிகர் சுரக்‌ஷா சமிதி, மணிப்பூரில் லிலிங் சமூக மன்றம், ஆந்திரப் பிரதேசத்தில் சமூக நீதிக் கழகம் போன்ற அமைப்புகள் இதனுடன் இணைந்தன. இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தச் சோதனைக்கு முன்பாகவே பல சமயங்களில், PFI மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அவற்றுள் முக்கியமானவை 2011 மும்பை குண்டு வெடிப்புகள், 2012 புனே குண்டுவெடிப்பு, 2013 ஹைதராபாத் குண்டு வெடிப்புகள் போன்ற நிகழ்வுகளில் இந்த அமைப்பு தொடர்புடையது என்று புகார்கள் எழுந்தன.

மாநிலங்களில் தடை!

ஜார்கண்ட் மாநில அரசு இந்த அமைப்பைத் தடை செய்தபோது 2018-ல் உயர் நீதிமன்றம் அத்தடையை விலக்கியது. இவை தவிர தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என பல மாநிலங்களில் இந்த அமைப்புமீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

என்.ஐ.ஏ சோதனை

ஆனால் அனைத்து குற்றச்சாட்டுகளையும் புறக்கணித்து, தங்கள்மீது போலிக் குற்றச்சாட்டுகளை பல ஊடகங்களும் அமைப்புகளும் முன்வைப்பதாக 2012-ல் தேசிய அளவில் பிரசாரம் செய்தது.

‘கவனிக்க’ப்படுவதன் பின்னணி!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ரா எழுதிய `THE LURKING HYDRA’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். இவர்கள் மாணவர்களைப் போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்துகொண்டு நம் நாட்டில் இயங்கி வருகிறார்கள். மேலும், தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாகச் செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளுக்குத் தீவிரவாதத்துக்கு ஆட்களை அனுப்பும் இயக்கமாகவும் உள்ளது” என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கோவா, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த ராம நவமி ஊர்வலத்தின்போது வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் வன்முறையால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறைகளுக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புதான் காரணம் என்ற குற்றச்சாட்டுகள் பா.ஜ.க-வினரால் முன்வைக்கப்பட்டன. மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் நடந்த தீ வைப்பு, கல்வீச்சு சம்பவத்துக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா சார்பில் நிதியுதவி அளிக்கப்பட்டதாக அந்த மாநில பா.ஜ.க தலைவர் வி.டி.சர்மா குற்றம்சாட்டினார்.

ராம நவமி கலவரம்

ராஜஸ்தான் மாநிலம் கராலியில் நடந்த பிரச்னைக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா காரணம் என பா.ஜ.க இளைஞரணி தேசியத் தலைவரும், எம்.பி-யுமான தேஜஸ்வி சூர்யா குற்றம்சாட்டினார். இப்படிப் பல்வேறு புகார்களின் பின்னணியில்தான் இந்த சோதனைகளும் கைதுகளும் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.