மாஸ்கோ: உக்ரைன் நாட்டுக்கு எதிராக ரஷியா போர் தொடுத்துவரும் நிலையில், அந்நாட்டின் மீதான போரில் பங்கேற்பதற்கு ரஷியா 3 லட்சம் பேரை திரட்ட முடிவெடுத்துள்ளது. இதில் போரில் பங்கேற்க பயந்து போய் ரஷியாவை சேர்ந்த ஆண்கள் பலரும் அந்த நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
மேற்கத்திய நாடுகளின் நோட்டோ அமைப்பில் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி மாதம் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.
உக்ரைன் நாட்டின் பல்வேறு இடங்களை ரஷியா கைப்பற்றினாலும் இன்னும் முழுமையாக உக்ரைன் நாட்டை ரஷியாவால் கைப்பற்ற முடியவில்லை.
உக்ரைன் ரஷியா போர்
இதனால் சுமார் 7 மாதங்கள் ஆகியும் உக்ரைன் – ரஷியா போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் நாட்டை எளிதில் கைப்பற்றிவிடலாம் என்ற ரஷியாவின் கணக்கை பொய்யாக்கி தொடர்ந்து ரஷியா நாட்டுக்கு உக்ரைன் டப் கொடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டுக்கு மேற்கத்திய நாடுகள் ராணுவ தளவாட பொருட்களை அளித்து வருகிறது என்றும்.. இருந்தாலும் ரஷியா தொடர்ந்து உக்ரைன் நாட்டை மீட்கும் வரை போரிடும் என்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்து வருகிறார்.
3 லட்சம் ரஷியர்கள்
சமீபத்தில் கூட மேற்கத்திய நாடுகள் அணு ஆயுத போரை தொடங்கினால் ரஷியாவும் அதற்கு பதில் தாக்குதல் அளிக்கும் என்று புதின் கூறியிருந்தார். இந்த நிலையில் உக்ரைன் மீதான் போரை தீவிரப்படுத்த சுமார் 3 லட்சம் ரஷியர்களை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்நாட்டு ராணுவ அமைச்சர் செர்ஜி ஜோய்கு கூறினார். இது குறித்து அவர் கூறுகையில், ”போருக்காக அணி திரட்டப்படும் நபர்கள் யாரும் கட்டாயப்படுத்தப்பட போவதில்லை. அவர்களது விருப்பத்தின் பேரிலேயே அழைக்கப்படுவார்கள். இதேபோல் ஆயுதப்படைகளில் பணியாற்றியவர்கள், பொருத்தமான அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே அழைக்கப்படுவர்’ என்று கூறினார்.
பின்லாந்துக்கு படையெடுப்பு
இதற்கிடையே உக்ரைன் மீதான ரஷியா போருக்கு ஆள் திரட்டும் செய்தி அறிந்து அந்நாட்டில் வசித்து வரும் ஆண்கள் பலரும் அவசர அவசரமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக ரஷ்யாவின் அண்டை நாடுகளில் ஒன்றான பின்லாந்து நாட்டுக்கு செல்லும் ரஷிய ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதில் ஒரே இரவில் அந்நாட்டுக்கு வரும் ரஷிய பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பின்லாந்து நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கார்கள் அணிவகுப்பு
இதேபோல் ஜார்ஜியாவுக்கும் ரஷிய ஆண்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். ஜார்ஜியா செல்ல விசா விணப்பிக்க தேவையில்லை என்பதால் பலர் சாலை மார்க்கமாகவே அந்நாட்டுக்கு செல்வதகாவும், குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் ரஷியாவில் இருந்து வெளியேறுவதாகவும், இதனால் ரஷியா – ஜார்ஜியா எல்லையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ரஷியா – ஜார்ஜியா எல்லையில் கார்கள் அணிவகுத்து நிற்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.
வெளிநாடுகளுக்கு படையெடுக்கும் ஆண்கள்
ரஷிய நாட்டின் உக்ரைன் மீதான் போருக்கு அணி திரட்டும் இந்த அறிவிப்பை தொடர்ந்து, ரஷியாவில் உள்ள ஆண்கள் குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு படையெடுக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ரஷியாவில் இருந்து வெளிநாடு செல்லும் விமானங்களின் டிக்கெட் கட்டணமும் பலமடங்கு அதிகரித்துள்ளது. சில குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்கள் முற்றிலும் தீர்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆண்களுக்கு டிக்கெட் பதிவு கிடையாது
இதற்கிடையே ஆண்கள் ரஷியாவை விட்டு வெளியேறுவதை தடுக்க அந்நாட்டில் உள்ள விமான நிறுவனங்களில் 18 முதல் 65 வயது வரையிலான ஆண்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. இதன் காரணமாகவே ஆண்கள் பலர் கார்களில் சாலை மார்க்கமாக வெளியேற தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுபோன்ற தகவல்கள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ரஷியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.