கான்பூர்: தனது கணவர் இறந்து போனதை நம்ப முடியாமல் தவித்த மனைவி, அவர் கோமாவில் இருப்பதாக தன்னை தானே ஏமாற்றிக் கொண்டு அவர் சடலத்துடன் 18 மாதங்களாக இருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எத்தனை உறவுகள் இருந்தாலும் கணவன் – மனைவி உறவு தனித்துவமான ஒன்றுதான். தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் ஆகியோருடனான உறவு இயற்கையானது. ரத்த உறவுகள் என்பதால் இயற்கையாகவே அவர்கள் மீது ஒரு பற்றுதல் அனைவருக்குமே இருக்கும்.
ஆனால் கணவன், மனைவி உறவு அப்படி அல்ல. எங்கேயோ பிறந்து வளர்ந்த இருவர், திருமணம் என்ற சடங்கின் மூலமாக ஒன்றிணைகிறார்கள். அவர்களுக்கு இடையே ரத்த பந்தமும் கிடையாது. ஆனால் காலம் செல்ல செல்ல, ரத்து உறவுகளை தாண்டியும் கணவன் – மனைவி இடையேயான பிணைப்பு அதிகமாகிறது. இதனால்தான், இந்த உறவை புனிதமானது என பெரியவர்கள் கூறுகிறார்கள்.
குழந்தை இல்லாத தம்பதி…
இதனை நிரூபிக்கும் வகையில் ஒரு சோக சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் தீட்சித் (52). வருமான வரித்துறையில் அதிகாரியாக பணிபுரிந்து வந்த இவருக்கு பூஜா ராணி (45) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகள் ஆகியும், குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாததால் முதலில் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அவர்கள், பிறகு ஒருவர் மீது ஒருவர் அதிகமாக அன்பு செலுத்தி வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
மாரடைப்பால் மரணம்
இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி தீட்சித் வழக்கம் போல அலுவலகம் சென்றுள்ளார். பின்னர் மதிய வேளையில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சக அலுவலர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, இந்த விஷயத்தை தீட்சித்தின் மனைவி பூஜா ராணியிடம் அவர்கள் தெரிவித்தனர். கணவர் இறந்துபோனதாக அவர்கள் சொல்லியதை கேட்ட பூஜா ராணி, அதிர்ச்சியில் உறைந்து போனார். பின்னர் தனது உறவினர்களுடன் மருத்துவமனைக்கு சென்ற அவர், கணவர் தீட்சித்தின் உடலை பெற்றுக் கொண்டார்.
கோமாவில் இருப்பதாக..
தீட்சித்தின் இறுதிச்சடங்கு குறித்து அவரது சக அலுவலர்கள் கேட்ட போது, தங்கள் சொந்த ஊரில் வைத்து நடைபெறும் என பூஜா ராணி கூறியுள்ளார். இதனால் அவர்களும் மேற்கொண்டு அதை பற்றி கேட்டுக்கொள்ளவில்லை.
இதன் தொடர்ச்சியாக, ஒரு ஆம்புலன்ஸ் மூலம் கணவர் தீட்சித்தின் உடலை, பூஜா ராணி வீட்டுக்கு கொண்டு சென்றார். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கேட்ட போது, தனது கணவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அவர் கூறியுள்ளார். உண்மையிலேயே தனது கணவர் இறந்ததை ஏற்க முடியாமல், அவர் கோமாவுக்கு சென்றுவிட்டதாக தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டார் பூஜா ராணி.
18 மாதங்கள் சடலத்துடன்..
பின்னர், கணவரின் இறந்த உடலுடன் ஒரு மாதம், இரண்டு மாதம் அல்ல.. மொத்தமாக 18 மாதங்கள் இருந்திருக்கிறார் மனைவி பூஜா ராணி.
இதனிடையே, உயிரிழந்த தீட்சித்தின் பென்ஷனுக்கு யாரும் விண்ணப்பிக்காததை அவரது சக அலுவலர்கள் கவனித்துள்ளனர். பின்னர், அவர்கள் போலீஸாருடன் தீட்சித்தின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்றனர். அப்போது, வீட்டின் மாடி அறையில் தீட்சித்தின் அழுகிய உடலுடனும், கடும் துர்நாற்றத்துடனும் அவரது மனைவி பூஜா ராணி வாழ்ந்து வந்தது தெரியவந்தது.
கெஞ்சிய பரிதாபம்..
பின்னர் அவரது உடலை அவர்கள் அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றனர். ஆனால், தனது கணவர் இறக்கவில்லை. அவரை எங்கும் கொண்டு சென்றுவிடாதீர்கள் என அவரது மனைவி அவர்களிடம் கெஞ்சினார். இதையடுத்து, ஒரு மருத்துவரை அழைத்து வந்து அவர் இறந்துவிட்டதாக உறுதி செய்த பின்னரே தீட்சித்தின் உடலை எடுக்க அவர் அனுமதித்தார். இதன் தொடர்ச்சியாக, அவரது உடல் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.