வாஷிங்டன்: நாளொன்றுக்கு 4 முறை டீ குடித்தால் டைப் 2 சர்க்கரை நோயை தவிர்க்கலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்க்கரை நோய் ஆய்வுக்கான ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டம், ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கடந்த 19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், சீனாவின் வூஹான் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 8 நாடுகளைச் சேர்ந்த 18 வயதுக்கு மேற்பட்ட 10 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில், பிளாக் டீ, கிரீன் டீ, ஊலாங் டீ ஆகியவற்றுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏதேனும் ஒரு டீயை நாளொன்றுக்கு 4 கப்கள் எடுத்துக்கொள்வதன் மூலம் வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் டைப் 2 சர்க்கரை நோயை, 17 சதவீதம் வரை 10 ஆண்டுகளுக்கு தடுக்க முடியும் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டீ குடிப்பது எனும் எளிய வழியின் மூலம் டைப் 2 சர்க்கரை நோயை தடுக்க முடியும் என்ற எங்களின் ஆய்வு முடிவு உண்மையில் ஆச்சரியம் தரக்கூடியது என வூஹான் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ஜியாயிங் லி தெரிவித்துள்ளார்.
தினமும் டீ குடிப்பது உடல் நலனுக்கு ஏற்றது என்பது நீண்டகாலமாக தெரிந்த ஒன்றுதான் என்றாலும், டீ குடிப்பதன் மூலம் சர்க்கரை நோயை தடுக்க முடியும் என்பது தற்போதுதான் தெளிவாகி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
டீ குடிப்பதால் சர்க்கரை நோயை தடுக்க முடியுமா என்பது தொடர்பாக கடந்த 1997ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 2,583 ஆண்கள், 2,616 பெண்கள் பங்கேற்றதாகவும், எனினும் இந்த ஆய்வில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், இதை அடுத்து 2009ல் மீண்டும் ஆய்வு நடத்தப்பட்டதாகவும் ஜியாயிங் லி தெரிவித்துள்ளார்.
இந்த ஆய்வுகளின் மேம்பட்ட வடிவமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அமைந்ததாக அவர் கூறியுள்ளார். இதில், 10 லட்சத்து 76 ஆயிரத்து 311 பேர் பங்கேற்றதாகவும், உலகின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள், ஆண்கள், பெண்கள், வயது என பல பிரிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ள ஜியாயிங் லி, மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு தெளிவான முடிவை அளித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.