ஆக்ரா: பிறந்த குழந்தைக்கு வாய் மூலம் சுவாசிக்க வைத்து அந்த குழந்தையை காப்பாற்றிய உத்தரபிரதேச மருத்துவரை பலரும் பாராட்டி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு ெபண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்தவுடன் பல நிமிடங்கள் ஆகியும் அழவில்லை; எவ்வித உடல் அசையுமின்றி இருந்தது. அதிர்ச்சியடைந்த மருத்துவ குழுவினர், அந்த குழந்தைக்கு ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
இருந்தாலும் கூட அந்த குழந்தையானது அசையவில்லை. குழந்தை இறந்துவிட்டதாக எல்லோரும் நினைத்த நிலையில், அங்கிருந்த மருத்துவர் சுரேகா சவுத்ரி உடனடியாக அந்த குழந்தையின் வாய் வழியாக சுவாசிக்க வழிவகை செய்தார். தனது வாயின் மூலம் குழந்தையின் வாயில் காற்றை ஊதிவிட்டார். அதையடுத்து அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக இயல்பாக சுவாசிக்க ஆரம்பித்தது. மேலும் உடலும் அசைந்தது. சிறிது நேரத்தில் அந்த குழந்தை அழவும் ஆரம்பித்தது. குழந்தையின் செய்கையை பார்த்து அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து மருத்துவர் சுரேகா சவுத்ரி கூறுகையில், ‘மூச்சுவிட முடியாமல் ஆபத்தான நிலையில் இருந்த பிறந்த குழந்தைக்கு, அவசர கால மருத்துவ உதவிகள் செய்யப்பட்டன. இருந்தும் குழந்தையின் உடலில் எவ்வித மாற்றமும் இல்லை. அதையடுத்து சுமார் 7 நிமிடங்கள் குழந்தையின் வாய் மூலம் சுவாசிக்க வைத்தேன். அதனால் குழந்தையின் உடல் அசைய ஆரம்பித்து; உயிரும் பிழைத்தது’ என்று மகிழ்ச்சியுடன் கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகும் நிலையில், இந்த சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்து குறிப்பிடப்படவில்லை.