உத்தர பிரதேச மாநிலத்தில், சட்டப்பேரவையில், பாஜக எம்எல்ஏக்கள் ஆன்லைன் ரம்மி விளையாடியதும், புகையிலை பொருட்களை பயன்படுத்தியதும் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், ஆளும் கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சபை நடவடிக்கையின் போது, பாஜக எம்எல்ஏ ராகேஷ் கோஸ்வாமி மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். மற்றொருவர், தனது கையில் புகையிலையை கொட்டி வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த இரண்டு வீடியோக்களையும் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் வெளியிட்டு உள்ளது. அந்த வீடியோவுடன், “சபையின் கண்ணியத்தை கெடுக்கும் பாஜக எம்எல்ஏக்கள். மஹோபாவைச் சேர்ந்த எம்எல்ஏ சபையில் மொபைல் கேம் விளையாடுகிறார். ஜான்சியின் பாஜக எம்எல்ஏ ரவி சர்மா புகையிலை சாப்பிடுகிறார். இவர்களிடம் மக்களின் பிரச்னைகளுக்கு பதில் இல்லை. சட்டப்பேரவையை பொழுது போக்கு இடமாக வைத்துள்ளனர். இவர்களின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் வெட்கக்கேடானது” என காட்டமாக விமர்சித்து பதிவிட்டு உள்ளது.
சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் செய்த செயலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக, பாஜக இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.