மதுரை, ஜெய்ஹிந்துபுரம் வ.உ.சி தெருவில் காளிமுத்து-பிரியதர்ஷினி தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் மகள் தர்ஷினி 3-ம் வகுப்பு படித்து வந்தார். டெய்லரான காளிமுத்துவுக்கும் பிரியதர்ஷினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் காளிமுத்து வீட்டைவிட்டு வெளியேற, அதன் பின்பு மனைவி பிரியதர்ஷினியும் வீட்டை பூட்டிவிட்டு மேலூரிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
இந்த நிலையில், சில நாள்களாக வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் பிரியதர்ஷினிக்குத் தகவல் கொடுக்க, அவர் உடனே கிளம்பி வந்து வீட்டைத் திறந்து பார்த்தபோது அழுகிய நிலையில் மகள் தர்ஷினி இறந்துகிடந்ததைப் பார்த்து அதிர்ந்து போனார்.
உடனே ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்தபின்னர், போலீஸார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தாய் பிரியதர்ஷினி உட்பட அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, “என் கணவர் காளிமுத்து மகளை சிவகங்கையிலுள்ள அக்கா வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார்” என பிரியதர்ஷினி தெரிவித்திருக்கிறார்.
காளிமுத்துவுக்கு போன் செய்தபோது அவருடைய மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் போலீஸின் சந்தேகம் அவர்மீது விழுந்திருக்கிறது. போலீஸார் சிறுமி மரணம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.