மதுரையில் காமராஜர் பல்கலைக்கழகம் அருகில் உள்ளது வடபழஞ்சி எனும் கிராமம். இங்குப் பலசரக்கு கடைகள், சிறு தொழில் செய்யும் கடைகள் என அதிகம் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள கடை ஒன்றின் கூரைக்குள்ளாக மின்கம்பம் ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது அதிர்ச்சி அளிக்கிறது. அதைச் சுற்றியுள்ள கடைகளின் உரிமையாளர்களும் மின்கம்பி சேதமடைந்திருப்பதால் அச்சத்திலேயே இருக்கின்றனர். அது எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் அடிமட்டத்திலிருந்து சேதமடைந்திருப்பதால், அந்தப் பகுதியைக் கடந்து போகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியிருப்பதாக கூறுகின்றனர் பகுதிவாசிகள்.
இது குறித்து நம்மிடம் பேசிய அந்தக் கடை உரிமையாளர், “ஐந்து ஆண்டுகளாக ஆழ்வார்புரத்திலிருக்கும் மின்வாரிய அலுவலகம் சென்று தொடர்ந்து மனு கொடுத்து வருகிறேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை” என்றார். தொடர்ந்து பேசிய பகுதி மக்கள், “மின்வாரிய ஊழியர்கள் வெறுமனே அடிக்கடி பார்த்துச் செல்கின்றனரே தவிர, எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இந்த மின்கம்பம் சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. சிமென்ட் பூச்சுகள் கொட்டி, கம்பிகள் வெளியே தெரிகின்றன. வருவது மழைகாலம் என்பதால் எங்களுக்கு பயமாக இருக்கிறது. மேலும், எங்கள் பகுதியில் வாரத்துக்கு இரண்டு நாள்கள் சந்தை நடக்கும். சுமார் 50-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் காய்கறி, பழக்கடைகள் போடுவார்கள். இந்த நிலையில், மின்கம்பம் மோசமாக இருப்பதால் மிகுந்த அச்சத்துடன் இருக்கிறோம். எனவே அதிகாரிகள் மின்கம்பத்தை இங்கிருந்து அகற்ற வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.