TNSTC ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை வழங்கவேண்டும் – உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு, வரும் நவம்பர் முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கும், போக்குவரத்துக் கழக ஓய்வூதிய நிதி அறக்கட்டளைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என 2015-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்பின் நான்கு முறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டப்போதும், போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை எனக் கூறி, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயண பிரசாத் விசாரித்தார். அகவிலைப்படி வழங்க மறுத்ததால் 86 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும், 20 ஆயிரம் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பணியில் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி வழங்கும் நிலையில் தங்களுக்கு வழங்க மறுப்பது பாரபட்சமானது என ஓய்வுபெற்ற பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த ஜூலை மாதம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
image
ஆனால் நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மற்ற துறைகளில் போதுமான நிதி இருப்பதாகவும், குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளதாகவும் தெரிவித்த அரசு, போக்குவரத்து துறையில் அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் உள்ளதால் அவர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி உயர்வு வழங்க 81 கோடி ரூபாய் செலவாகும் எனவும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
அரசுத்தரப்பில் இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய பலன்களை வழங்க வேண்டும் என்ற கேள்வி எழும்போதெல்லாம், நிதி நெருக்கடி என்ற பதிலையே அரசு வழங்கி வருவதாக அதிருப்தி தெரிவித்தார். நிதி நெருக்கடியை காரணமாக கூறும் அரசு, சமீபத்தில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது எப்படி என ஆச்சர்யம் தெரிவித்த நீதிபதி, அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வரும் நவம்பர் முதல் வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அகவிலைப்படி உயர்வை வழங்கியது குறித்து நவம்பர் 25ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.