பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூலை 12ம் தேதி நடந்த மோடி கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் சதி: பயிற்சி முகாம் நடத்திய கேரளாவை சேர்ந்த 4 பேர் கைது

புதுடெல்லி: நாடு முழுவதும் தேசிய புலனாய்வு முகமை எடுத்த நடவடிக்கைக்கு மத்தியில், பீகார் மாநிலம் பாட்னாவில் ஜூலை 12ம் தேதி நடந்த பிரதமர் மோடி கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த பயிற்சி முகாம் நடத்திய கேரளாவை சேர்ந்த 4 பேரை அமலாக்கத்துறை கைது ெசய்துள்ளது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அசாம் உட்பட 13  மாநிலங்களில் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), பாப்புலர்  பிரண்ட் ஆப் இந்தியா உள்ளிட்ட சில அமைப்புகளின் தொடர்புடைவர்களின் வீடு  மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியது.

இந்தச் சோதனைகளின் ஒரு பகுதியாக  100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தீவிரவாத சதி செயல்கள்,  சட்டவிரோத பணப்பரிமாற்றம், பயிற்சி முகாம்களை நடத்துதல், தடைசெய்யப்பட்ட  அமைப்புகளில் மக்களைச் சேர்ப்பதற்கு முயற்சிகள் செய்தல் போன்ற புகார்களின்  அடிப்படையில் என்ஐஏ சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்தச் சோதனைகளில், அமலாக்கத்துறையினரும், அந்தந்த மாநில உள்ளூர் போலீசரும் கூடுதலாக ஈடுபட்டனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் தீவிரவாத செயல்களுக்காக ரூ. 125 கோடி அளவிற்கு சட்டவிரேத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அமலாக்கத்துறையின் தொடர் ரெய்டின் மூலம் அம்பலமாகி உள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் மட்டுமின்றி, சிஎப்ஐ உள்ளிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள், ஆர்வலர்கள்  அல்லது அலுவலகப் பணியாளர்களின் வங்கிக் கணக்குகள் மூலமாகவும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், துருக்கி போன்ற நாடுகளில் இருந்து பெறப்பட்ட  நிதிகள், அரசு நிறுவனங்களிடம் மறைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு  பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்யப்படவில்லை.

நிதி மற்றும் நன்கொடைகளை திரட்டுவதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு எந்த விதியையும் பின்பற்றவில்லை என்று அமலாக்கத்துறை தனது குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் என்ஐஏ 100க்கும் மேற்பட்டோரை கைது செய்திருந்தாலும், அதேநேரம் அமலாக்கத்துறையும் மேலும் 4 பேரை இதே வழக்கில் கைது செய்துள்ளன. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘கேரளாவில் கைது செய்யப்பட்ட  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் உறுப்பினர் ஷஃபிக் பயத் என்பவர் அளித்த வாக்குமூலத்தில், பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டது அம்பலமாகி உள்ளது. கடந்த ஜூலை 12ம் தேதி பிரதமர் மோடி பாட்னாவிற்கு வருகை தந்தார். அன்றைய தினம் பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்காக  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் பயிற்சி முகாமை நடத்தி உள்ளனர். உளவு தகவலின் அடிப்படையில் சதிகள் முறியடிக்கப்பட்டன. இவ்விவகாரத்தில் கேரளாவை சேர்ந்த ஷஃபிக் பயத்துடன் அவரின் சக கூட்டாளிகளான பர்வேஸ் அகமது, முகமது இலியாஸ், அப்துல் முகீத் ஆகிய 4 பேரும் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நாடு முழுவதும் இவர்களது கிளைகள் விரிவடைந்து வருவதால், அவர்களின் குற்றப் பின்னணி குறித்த விபரங்கள் முழுமையாக சேகரிக்கப்பட்டன. அதன் அடிப்படையிலேயே ரெய்டுகள் நடத்தப்பட்டு 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ஏற்கனவே தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலுடன் சில குறிப்பிட்ட அமைப்புகளை சேர்க்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.