செக் வைக்கும் ஸ்டாலின்: கிலியில் அதிமுக அணிகள்!

தமிழக சட்டப்பேரவை கடைசியாக கடந்த மே மாதம் கூடியது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பேரவையை கூட்ட வேண்டும் என்பதால், அடுத்த கூட்டத்தை நவம்பரில் கூட்ட வேண்டும். ஆனால், முதலீடுகளை ஈர்க்க நவம்பர் மாதம் வெளிநாடு செல்ல முதல்வர்

திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, அதற்கு முன்னதாகவே சட்டப்பேரவையை கூட்டிவிட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறாராம்.

அதன்படி, தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் 2ஆவது வாரத்தில் கூட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகை வரவுள்ளதால் அதற்கு முன்னதாகவே கூட்டத்தொடர் நடக்கும் எனவும், சட்டப்பேரவை கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கூட்டத்தொடரில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா கொண்டு வரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதா மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அறிக்கை, ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி அறிக்கை மற்றும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக அருணாஅ ஜெகதீசன் அறிக்கை குறித்து சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போதே, சட்ட வல்லுநர்களின் கருத்தை பெற்று அந்த அறிக்கைகளை பேரவையில் வைப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற பிறகு வெளியான செய்திக் குறிப்பில், சசிகலா, மருத்துவர் சிவக்குமார், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் ஆகியோர் மீது விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது முதல்வர் ஸ்டாலினும் இதுகுறித்து பேசினார். அதேசமயம், விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படும் பட்சத்தில் வெளிப்படையாக சில விஷயங்களை சொல்ல நேரிடும் என விஜயபாஸ்கரும் தனது நெருக்கமான வட்டாரங்களிடம் தெரிவித்து வருவதால், அதிமுகவுக்குளேயே புயல் வீசுகிறதாம். அந்த சமயத்தில் முதல்வரின் பொறுப்புகளை கவனித்து வந்த ஓபிஎஸ்ஸின் பெயர் இதில் இடம்பெறாததும் கவனிக்கத்தக்கது. மேலும், விசாரணை பட்டியலில் இருப்பவர்களிடம் ஏற்கனவே ஆணையம் விசாரித்துள்ள நிலையில், மீண்டும் விசாரிக்கப்பட பரிந்துரைத்திருப்பது ஏதோ வசமாக சிக்கியிருப்பதையே காட்டுகிறது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதேபோல், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். எனவே, இந்த இரண்டு அறிக்கைகளையும் வைத்து அதிமுகவை ஆட்டம் காண வைக்கும் திட்டத்தில் ஸ்டாலின் இருப்பதாக தெரிகிறது.

இதனிடையே, இந்த அறிக்கைகளை பேரவைக்கு தெரிவிக்க வேண்டும் என்கிற அளவில் மட்டுமே தாக்கல் செய்யப்படும். பெரிதாக எந்த நடவடிக்கையும் இருக்காது எனவும் ஒரு டாக் ஓடுகிறது. அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை, பொதுவெளியில் கசிந்தபோதே, ஸ்டாலின் கடுப்பாகி விட்டதாகவும், ஆனால் வெளிப்படையாக அவர் காட்டிக் கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டது. அந்த அறிக்கையில் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு அதிகாரிகள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டும் என்கிறார்கள். ஏற்கனவே அரசு ஊழியர்கள் மத்தியில் திமுகவின் இமேஜ் சரிந்து வரும் நிலையில், அதிகாரிகள் மீதான நடவடிக்கை வேறு மாதிரியான தக்கங்களை ஏற்படுத்து விடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம். மேலும், தான் சிக்கும் பட்சத்தில், தலைமை செயலாளராக இருந்த ராமமோகனராவ் ஐஏஎஸ் அதிகாரிகளின் பல்வேறு விவகாரங்களை பொதுவெளியில் பேசக்கூடும் என்பதாலும், அது திமுகவுக்கு எதிராக அமைந்து விடும் என்றும் மேலிடத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாம்.

எனவே, ஒரு அறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு, மற்றொரு அறிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் அது நன்றாக இருக்காது; ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என்பதால், இரண்டு அறிக்கைகளுமே தாக்கல் செய்யப்படும். ஆனால், பெரிதாக நடவடிக்கை இருக்காது என்கிறார்கள். இருந்தாலும், அறிக்கையில் உள்ள விஷயங்கள் திமுக கைக்கு கிடைத்திருக்கும் லட்டு போன்றது. அதனை எப்போது வேண்டுமானாலும் அக்கட்சி பயன்படுத்தும் என்றும் கூறுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.