மின் கட்டண உயர்வு நெருக்கடி: கோவையில் வடமாநில தொழிலாளர்கள் கட்டாய விடுப்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

கோவை: நூலுக்கு சரியான விலை கிடைக்காதது, மூலப்பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டணம் உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக, முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு 600 ஓபன் எண்ட் நூற்பாலைகளில் உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டு வடமாநில தொழிலாளர்கள் கட்டாய விடுப்பில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் பிஹார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். உற்பத்தி பிரிவை சேர்ந்த பல்வேறு தொழில் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் போதும் வார்ப்பு, கட்டுமானம், ஓபன் எண்ட் நூற்பாலைகள் உள்ளிட்ட தொழில்துறைகளில் பணியாற்றுபவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் வடமாநில தொழிலாளர்கள் ஆவர்.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு போனஸ் பெற்ற பின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த ஆண்டு தொழில் நிறுவனங்களில் நெருக்கடி காரணமாக உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தீபாவளி பண்டிகைக்கு முதல் முறையாக உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டு வடமாநில தொழிலாளர்களுக்கு 15 நாட்கள் கட்டாய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்கத்தின் தலைவர் அருள்மொழி கூறியதாவது: “தமிழகம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட ஓபன் எண்ட் நூற்பாலைகள் செயல்படுகின்றன. இவற்றில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். நூலுக்கு தகுந்த விலை கிடைக்காத காரணத்தால் தொழில் நலிவடைந்துள்ளது. மின் கட்டணம், மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தொழிலில் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளது.

பொதுவாக ஹோலி, தீபாவளி ஆகிய இரு பண்டிகைகளுக்கு தான் வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுவார்கள். உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க ஒரு பாதி தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கும், மறுபாதி தொழிலாளர்கள் ஹோலி பண்டிகைக்கும் சொந்த ஊர்களுக்கு விடுமுறை அளித்து அனுப்பி வைக்கப்படுவார்கள். தற்போது முதல் முறையாக இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு உற்பத்தி முழுவதும் நிறுத்திவைக்கப்பட்டு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு 15 நாட்கள் கட்டாய விடுமுறை அளித்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

கோவை குறு, சிறு வார்ப்பு தொழிற்சாலைகள் சங்கத்தின் தலைவர் சிவசண்முககுமார் கூறியதாவது: “கோவை உட்பட தமிழகத்தில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு போதிய அளவு பணி வழங்கப்படுவதில்லை. வழக்கமாக ஓவர் டைம் பார்ப்பதற்கு பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டுவார்கள். தற்போது நிலைமை மோசமாக உள்ளதால் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வைக்க, தொழில்முனைவோர் மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.