நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க துணை பொதுச்செயலாளருமான ஆ.ராசா, அண்மையில் இந்து மதம் குறித்துப் பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், ராசாவின் தொகுதியான நீலகிரியில் இந்து அமைப்பினர் சார்பில் கடந்த 20-ம் தேதி கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நீலகிரியில் 50 சதவிகித கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அன்றைய தினம் நீலகிரி மாவட்டம், பந்தலூர் பகுதியில் திறக்கப்பட்டிருந்த கடைகளை இந்து முன்னணியினர் அடைக்க வற்புறுத்தியதாக வணிகர்கள் புகார் தெரிவித்தனர்.
பந்தலூரில் திறந்து வைக்கப்பட்டிருந்த கடைமீது இந்து முன்னணியினர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால், வணிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்வீச்சில் ஈடுபட்டவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது இந்து முன்னணியைச் சேர்ந்த 3 பேரை கைதுசெய்திருக்கின்றனர்.
கைது குறித்துப் பேசிய காவல்துறையினர், “கல்வீச்சில் ஈடுபட்டு மேட்டுப்பாளையத்தில் தலைமறைவாக இருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த முரளி, ராஜா, சூர்யா ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்திருக்கிறோம்” என்றனர்.