கோவை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினரை என்.ஐ.ஏ கைதுசெய்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தின. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு முதல் கோவை பா.ஜ.க அலுவலகம்,
டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடை மற்றும் பா.ஜ.க, இந்து முன்னணி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ஆங்காங்கே அரசுப் பேருந்துகள், இந்து அமைப்பு நிர்வாகிகளின் கார், ஆட்டோக்கள் சேதப்படுத்தப்பட்டன.
நேற்று மாலை எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஜாபர் என்பவர்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோவை மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் வாகனங்கள் தீவிர தணிக்கை செய்யப்பட்டு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.
ஏ.டி.ஜி.பி தாமரைக்கண்ணன் கோவை வந்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இரவு முழுவதும் ஐ.ஜி சுதாகர், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் எஸ்.பி பத்ரி நாராயணன் தலைமையில் போலீஸார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், பாதுகாப்புப் பணிக்காக வெளிமாவட்டங்களிலிருந்து சுமார் 1,700 போலீஸார் அழைக்கப்பட்டிருக்கின்றனர். கோவை முழுவதும் மொத்தம் 4,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. காலியாக இருந்த கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையாளர் பதவி, சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் பார்த்திபனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
சிங்காநல்லூர் சரக உதவி ஆணையராக பணியாற்றும் அருணை, சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளராக நியமித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருக்கிறார். இந்து அமைப்புகள் மற்றும் ஜமாத் நிர்வாகிகளுடன் அதிகாரிகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
கோவை மாவட்டத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து, தலைமைச் செயலாளர் இறையன்புடன் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினர். இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் சமீரன், “கோவை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 7 சம்பவங்களிலும் அதிக பாதிப்பு எதுவும் இல்லை. பதற்றம் அடையும் சூழல் இல்லை. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
மதநல்லிணக்க கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாநகரப் பகுதியில் வெளிமாவட்ட, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வந்தால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வீசப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது. தனிப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.
மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “அனைத்து சம்பவங்களிலும் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இருசக்கர வாகனம் வேகமாகச் செல்வதால் பைக் எண்னை சிசிடிவி மூலம் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரு சில குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் வருகின்றன.
பிரச்னை ஏற்படுத்தும் விதமாக பதிவிடுபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியை சீர்குலைப்பவர்கள்மீது குண்டர் சட்டம் பாயும். ஒரு சில நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் கைதுசெய்யப்படுவார்கள்” என்றார்