விழுப்புரம்: “திராவிட மாடலா, நாங்கள் முன்வைக்கும் தமிழ் மாடலா என முதல்வர் ஸ்டாலின் உடன் நான் விவாதிக்கத் தயார்” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டில் பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அரசு நலத்திட்ட பிரிவு சார்பில் இரண்டு நாள் கண்காட்சி நிகழ்ச்சியை இன்று பாஜக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை துவங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் கூறியது: “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி உடைய வாழ்க்கையை பற்றி இரண்டு நாள் கண்காட்சி திறந்து வைப்பதற்காக வந்து உள்ளேன். மத்திய அரசின் நலத்திட்டங்கள், அதனுடைய பயன்பாடுகள் மற்றும் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு, அவர் பிறந்ததிலிருந்து 72 கால வாழ்க்கை பயணம் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது” என்றார்.
தமிழக ஆளுநர், முதல்வரைப் பற்றி பாராட்டி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “ஆளுநர் என்ன கருத்து கூறியிருந்தாலும் அது அவருடைய கருத்து. திமுக அரசு மக்களிடம் ஊழல் அரசு என பெயர் வாங்கியுள்ளது. சட்டம் – ஒழுங்கு பெருமளவில் சீர்குலைந்துள்ளது” என்றார்.
பிரதமர் நகர்ப்புற நக்சல் என்று பிரதமர் கூறியது குறித்து கேட்டபோது, “எத்தனையோ திட்டங்கள் தடுக்கப்பட்டுள்ளது. கூடங்குளத்தில் ஆரம்பித்து எட்டு வழி சாலை, ஸ்டெர்லைட் என புவியியல் ஆர்வலர்கள் பல என்ஜிஓக்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். தற்போது திமுக ஆட்சிக்கு பின் அவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. எல்லோரும் மௌனமாக உள்ளனர். இந்தியாவில் காப்பர் விலை 2 மடங்கு மேல் விலை உயர்ந்துள்ளது. ஏற்றுமதி செய்த நாம் தற்போது இறக்குமதி செய்து கொண்டுள்ளோம். இதையெல்லாம் பேச ஆரம்பித்தால் நீண்டுகொண்டே செல்லும்” என்று அவர் கூறினார்.
அமைச்சர் பொன்முடி வரலாறு குறித்து விவாதிக்கத் தயாரா என்று கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “திராவிட மாடலா, நாங்கள் முன்வைக்கும் தமிழ் மாடலா என விவாதிக்கத் தயார். பொன்முடியுடன் விவாதிக்க எங்கள் மாநில துணைத் தலைவரும், திமுக தலைவருடன் நான் விவாதிக்க தயார். நேரத்தையும், நாளையும் குறிப்பிட்டு சொன்னால் நேரலையில் விவாதிக்க தயார்” என்று அவர் பேசினார்.
அப்போது, மாநிலத் துணைத்தலைவர் ஏஜி சம்பத், மாவட்டத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி. முன்னாள் மாவட்டத்தலைவர் கலிவரதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.