மகாளய அமாவாசை: கடைப்பிடிப்பது எப்படி? 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன?

ஏன் மகாளய அமாவாசை முக்கியம்?

ஓர் ஆண்டில் பன்னிரு அமாவாசை திதிகள் வரும். அவற்றுள் மிக முக்கியமானது மகாளய அமாவாசை. ஏன் தெரியுமா? நம் முன்னோர்கள் பித்ரு லோகம் எனப்படும் தென்புலத்தில் இருப்பார்கள். அங்கிருந்து நாம் ஒவ்வொரு அமாவாசைக்கும் தர்ப்பணம் மூலம் அளிக்கும் எள் மற்றும் நீரினை ஏற்று திருப்தி கொள்வார்கள் என்பது நம்பிக்கை.

நம் முன்னோர்கள் ஆடி அமாவாசையின் போது பித்ரு லோகத்திலிருந்து கிளம்பி நாம் வசிக்கும் பூமியை நோக்கிப் பயணப்படுவார்களாம். அப்படிப் புறப்பட்டவர்கள் சரியாக ஆவணி மாத பௌர்ணமி நாளுக்கு அடுத்த நாள் பூமிக்கு வந்து சேர்வார்கள். அடுத்த பதினைந்து நாள்களும் அவர்கள் நம்மோடு பூமியிலேயே தங்கி இருந்து நாம் அளிக்கும் நீரையும் உணவையும் ஏற்றுக்கொண்டு திருப்தியாகி மகாளய அமாவாசை முடிந்ததும் மீண்டும் பித்ரு லோகம் நோக்கிப் புறப்படுவார்களாம்.

முன்னோரின் ஆன்மாவைக் குளிரச் செய்யும் மகாளய பட்ச வழிபாடு

அப்படி நம் முன்னோர்கள் நம்மோடு இருக்கும் இந்த நாள்களில் நாம் அவர்களை நினைத்து வழிபடுவதைக் கண்டு அவர்கள் மகிழ்ந்து நமக்கு நல் ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை. எனவே மகா புண்ணியகாலமான மகாளயபட்சம் 15 நாள்களும் நாம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் தந்து வழிபட வேண்டும். ஆனால் அனைவருக்கும் அது சாத்தியம் இல்லை. எனவே மகாளய அமாவாசை அன்று தவறாமல் தர்ப்பணம் தரவேண்டும். அப்படிச் செய்தால் ஆண்டு முழுவதும் அமாவாசை நாளில் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மகாளய அமாவாசை இந்த ஆண்டு 25.9.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நாள் முழுவதுமே அமாவாசை திதி இருப்பதால் எப்போது வேண்டுமானால் முன்னோர் வழிபாட்டை மேற்கொள்ளலாம். நீர் நிலைகளிலும் கோயில் மண்டபங்களிலும் சென்று இதைச் செய்வது விசேஷம். ராமேஸ்வரம், திருச்சி அம்மா மண்டபம், திருப்பூவணம் போன்ற தலங்களில் இது விசேஷமான தினம். பக்தர்கள் லட்சக்கணக்கில் குவிவார்கள். எல்லோரும் அங்குச் சென்று வழிபட வேண்டும் என்ற அவசியம் இல்லை. எனவே வீட்டிலேயே முன்னோர்களை நினைத்து முதலில் தர்ப்பணம் கொடுத்து பின் படையல் போட்டு வழிபடுவது சிறப்பு.

யார் எல்லாம் கடைப்பிடிக்க வேண்டும்?

தந்தை இல்லாத அனைவரும் இந்த அமாவாசை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்கிறது சாஸ்திரம். எனவே அவரவர் குடும்ப வழக்கப்படி இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும். தந்தை இருக்கும் பட்சத்தில் அவர் இந்த வழிபாட்டை மேற்கொள்வார் என்பதால் மகன்கள் அதில் கூட இருந்தாலே போதுமானது. நம் நேரடி பித்ருக்களுக்கு என்ன பிடிக்குமோ அதைச் சமைத்துப் படையல் இட வேண்டும். இந்த நாளில் காக்கைக்கு அன்னம் இட்ட பிறகே உணவு உட்கொள்வது வழக்கம்.

மகாளய அமாவாசை

தனம் தான்யம் தரும் தானம்

மகாளய அமாவாசை மிகவும் புண்ணியமான தினம் என்பதால் இந்த நாளில் தானங்கள் செய்வது விசேஷம். இன்று செய்யும் தானங்கள் பல மடங்கு பலன்களைத் தரும் என்பது நம்பிக்கை. அவ்வாறு 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய தானங்கள் குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதரிடம் கேட்டோம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு ராசியிலேயே ராகு இருக்கிறார். பன்னிரண்டில் குரு இருக்கும் காலகட்டம் என்பதால் இவர்கள் கோதுமை தானம் செய்வது நல்லது. மேஷம் சூரிய பகவான் உச்சமடையும் வீடு. எனவே சூரிய பகவானுக்குரிய கோதுமையை தானம் செய்து ஆதித்ய கிருதயம் அல்லது சூரியனை வழிபடும் பாடல்களைச் சொல்லி வழிபாடு செய்தால் நற்பலன்கள் பெருகும்.

ரிஷபம்: ரிஷபராசிக்காரகளுக்கு 12-ல் ராகு 11-ல் குரு அமர்ந்துள்ளனர். எனவே இவர்கள் சமைத்த உணவு (அன்னதானம்) எதுவானாலும் தானம் கொடுப்பது சிறப்பு. இல்லையேல் பச்சரிசி, வெல்லம், பருப்பு ஆகியவற்றை அருகில் இருக்கும் சிவாலயத்துக்கு தானம் கொடுத்து வழிபட்டால் துன்பங்கள் தீர்ந்து நன்மைகள் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த குறைகள் தீரும்.

மிதுனம்: சகோதர ஸ்தானமான 4-ம் வீட்டில் சூரியன், சந்திரன், சுக்கிரம் ஆகிய கிரகங்கள் அமைந்திருக்கிறார்கள். எனவே 10-ல் குரு மறைந்திருப்பதாலும் எட்டில் சனி ஆட்சி பலம் பெற்று அமர்ந்திருப்பதாலும் உண்டாகும் அசுப பலன்கள் குறைய கொண்டைக்கடலை தானம் செய்வது சிறப்பு. இதனால் சகோதர சகோதரிகளின் வாழ்வில் நன்மை அதிகரிக்கும்.

கடகம்: 3-ம் வீட்டில் ராசி நாதன் சந்திரன் சூரியன் சுக்கிரனோடு இணைந்திருக்கும் நாள் என்பதால் இந்த நாள் மிகவும் நல்ல நாள். இந்த நாளில் செய்யும் வழிபாடுகள் அனைத்துமே தன லாபத்தை அதிகரிக்கும். குறிப்பாக பச்சரிசி தானம் கொடுப்பதோ அல்லது தயிர் சாதம் தானம் கொடுப்பதோ மிகுந்த நன்மையைத் தரும்.

சிம்மம்: ராசி நாதன் 2-ம் வீட்டிலேயே சந்திரன் சுக்கிரனுடன் அமர்ந்திருக்கிறார். 6-ம் வீட்டில் சனி பகவான் அருள் பாலிக்கிறார். இவற்றால் உண்டாகும் நற்பலன்கள் அதிகரிக்க கோதுமை தானம் செய்வது சிறப்பு. இந்த நாளில் ஆஞ்சநேயர் ஆலயம் சென்று வழிபாடு செய்வதும் மிகவும் சிறப்பான பலன்கள் தரும். மேலும் கருப்பு உளுந்து, நல்லெண்ணெய் தானம் செய்வதும் சிறப்பு.

கன்னி: ராசியில் சந்திரன் இருக்கும் நாள். இந்த நாளில் செய்யும் தானங்கள் கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்னைகள் தீரும். புரிதல் மேம்படும். கொண்டைக் கடலை தானம் செய்வதும் சிவ ஆலயத்துக்கு அபிஷேகப் பொருள்கள் தானம் செய்வதும் சிறப்பாகும். இதனால் சத்ருக்களின் தொல்லைகள் குறைந்து வெற்றிகள் குவியும்.

ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

துலாம்: ராசியில் கேது, 7-ல் ராகு, 4-ல் சனி, 6-ல் கேது என்று கிரகங்கள் அமர்ந்திருப்பதால் இந்த நாளில் விநாயகர் வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். அறுகம்புல்லால் அர்ச்சனை செய்வதும் அபிஷேகத்துக்குப் பால் வாங்கிக்கொடுப்பதும் பிரச்னைகளிலிருந்து வெளியேற உதவும்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் சுமங்கலிகளுக்கு வஸ்திர தானம் செய்வது சிறப்பு. திருமணம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்கள் கையால் இந்த தானங்களைச் செய்ய திருமண யோகம் கூடிவரும். பன்னிரண்டில் இருக்கும் கேது பகவானால் உண்டாகும் தொல்லைகள் குறையும்

தனுசு: 10-ல் சந்திரன், 5-ல் ராகு அமர்ந்திருப்பதால் தனுசு ராசிக்காரர்கள் துர்கையை வழிபாடு செய்ய வேண்டும். துர்கைக்கு எலுமிச்சை சாதம் நிவேதனம் செய்வது சிறப்பு. இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிரிகளின் தொல்லைகள் விலகும்.

மகரம்: ராசியில் இருக்கும் சனிபகவானுக்கும் பாக்கியத்தில் இருக்கும் சூரிய பகவானுக்கும் உரிய தானங்கள் செய்வது விசேஷம். ஆஞ்சநேயர் ஆலயத்துக்குச் சென்று கறுப்பு உளுந்து, நல்லெண்ணெய், பச்சரிசி முதலியன தானம் தருவது அவசியம். அதேபோன்று கோதுமை தானம் கொடுப்பதன் மூலம் நற்பலன்களைப் பெறலாம்.

கும்பம்: 12-ல் சனி, 2-ல் குரு, 3-ல் ராகு, 4-ல் செவ்வாய் என்று அமர்ந்திருக்கும் இந்தக் காலத்தில் வரும் அமாவாசை நாளில் நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கும் சிவாலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வது விசேஷம். நீர் நிலைகளில் இருக்கும் மீன்களுக்குப் பொறியிடுவது, பசுமாட்டுக்கு உணவளிப்பது ஆகியன நற்பலன்களைத் தரும்.

மீனம்: ராசியில் குரு, 7-ல் சூரியன், சந்திரன், சுக்கிரன் சேர்க்கை அமைந்திருப்பதால் இந்த ராசிக்காரர்கள் தவறாமல் பெண் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. ராகு காலத்தில் பைரவருக்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது சிறப்பு. மேலும் ஆதரவற்றவர்களுக்கு ஆடைகள் தானம் செய்வதும் சிறு குழந்தைகளுக்கு வஸ்திர தானம் செய்வதும் நற்பலன்களை அதிகரிக்கும். உங்கள் வீட்டில் தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் கை கூடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.