சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (யுஎஸ்எய்ட்) இலங்கைக்கான தூதரகப் பணிப்பாளர் கேப்ரியல் கிராவ்வை வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, 2022 செப்டம்பர் 21, புதன்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
யுஎஸ்எய்ட் நிர்வாகத் தூதுவர் சமந்தா பவரின் சமீபத்திய விஜயத்தை வரவேற்ற இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யுஎஸ்எய்ட் இலங்கைக்கு வழங்கிய மனிதாபிமான மற்றும் அவசரகால உதவிகளுக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
யுஎஸ்எய்ட் இன் தூதரகப் பணிப்பாளர், குறிப்பாக நிர்வாகம் மற்றும் சமூக ஒற்றுமை, பொருளாதார அபிவிருத்தி மற்றும் தனியார் துறை வளர்ச்சி; மற்றும் பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடி ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கிய தமது முன்னுரிமைப் பகுதிகள் போன்ற நாட்டில் யுஎஸ்எய்ட் ஆல் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து இராஜாங்க அமைச்சரிடம் எடுத்துரைத்தார்;. பொருளாதார அபிவிருத்தியில் தனியார் துறையின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஒப்புக்கொண்ட யுஎஸ்எய்ட் இன் தூதரகப் பணிப்பாளர், பெறுமதி சங்கிலி மற்றும் பொருளாதாரத்தில் தனியார் துறையின் பங்களிப்பு ஆகியவற்றை ஆதரிக்கும் தமது திட்டங்களைக் குறிப்பிட்டார்.
கிரபைட், பொஸ்பேட் மற்றும் இல்மனைட் உள்ளிட்ட இலங்கையில் கிடைக்கும் கனிம வளங்கள் குறித்து குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர், இந்த வளங்களைப் பயன்படுத்தி பெறுமதி சேர்க்கப்பட்ட தொழில்களுக்கு ஆதரவளிப்பதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டார். சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான யுஎஸ்எய்ட் திட்டங்களின் பங்களிப்பை வரவேற்ற இராஜாங்க அமைச்சர், நாட்டில் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் தொழில்களில் இளைஞர்களின் திறமை மற்றும் புத்தாக்கத் திறன்களை ஆதரிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தார். இது சம்பந்தமாக, அவர் நம்பிக்கைக்குரிய இளம் தொழில்முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு மேலும் ஆதரவளிக்குமாறு யுஎஸ்எய்ட்க்கு அழைப்பு விடுத்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் யுஎஸ்எய்ட் கொழும்பு அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 செப்டம்பர் 23