பெய்ஜிங்: சீனாவில் விமானச் சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், அதிவிரைவு ரயில் சேவையும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில், அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள சீனா. உலக வல்லரசுகளில் ஒன்றாகச் சீனா கருதப்படுகிறது.
இதனிடையே உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவில் இருந்து இப்போது வரும் தகவல்கள் நல்லதாக இல்லை. இரு நாட்களாகவே இணையத்தில் இதுதான் பேசுபொருளாக உள்ளது.
சீனா
கடந்த 20, 20 ஆண்டுகளில் சீனா இந்தளவுக்குப் பிரம்மாண்டமான வளர்ச்சியை எட்டி உள்ளது. மேலும், பல கோடி பேரை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டுள்ளது. சீனாவின் இந்த வளர்ச்சிக்கு அங்குள்ள அரசும் முக்கிய காரணம் ஆகும். ஏனென்றால் அங்கு மக்களாட்சி இல்லை.. ஒற்றை ஆட்சி முறையே நடைமுறையில் உள்ளது. இதனால் அந்நாட்டு அரசால் நீண்டகால திட்டங்களை எளிதாகப் போட முடியும்.
ஜி ஜின்பிங்
குறுகிய காலத்தில் சீனா இந்தளவுக்கு வளர்ச்சி அடைய இதுவும் முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. அந்நாட்டின் அதிபராக ஜி ஜின்பிங் இருந்து வருகிறார். இவர் சமீபத்தில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு இருந்தார். இருப்பினும், அதன் பின்னர் ஜி ஜின்பிங் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
பரவும் தகவல்கள்
இதனிடையே சீன ராணுவ தலைவர் பதவியில் இருந்து ஜி ஜின்பிங் நீக்கப்பட்டதாகவும் உஸ்பெகிஸ்தானில் இருந்து திரும்பிய அவரை ஏர்போர்ட்டில் வைத்தே ராணுவம் கைது செய்ததாகவும் இணையத்தில் தகவல் வெளியானது. அதாவது சீனாவில் ராணுவம் மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடந்ததாக இணையத்தில் தகவல் பரவின. குறிப்பாக, ஜி ஜின்பிங் இப்போது வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ராணுவம்
சீன தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி ராணுவ வாகனங்கள் அணிவகுத்துச் செல்வதாகவும் கூறப்பட்டது. மேலும், அங்கு வணிக நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டதாகத் தகவல் பரவின. இப்படி இணையம் முழுக்க சீனா குறித்தே தகவல் பரவின. இதற்கிடையே பாஜகவின் சுப்பிரமணிய சுவாமியும் தனது ட்விட்டரில் இது குறித்து கருத்து பதிவிட்டு உள்ளார். ஜி ஜின்பிங் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் இது குறித்து தகவல்களைச் சரிபார்க்க வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
விமானங்கள்
இதற்கிடையே சீனாவில் போக்குவரத்தும் முற்றிலுமாக முடங்கி உள்ளது. அங்குள்ள அனைத்து விமானங்களும் காரணங்கள் சொல்லப்படாமல் ரத்து செய்யப்பட்டு வருகிறது. சுமார் 9000க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன தலைநகர் பெய்ஜிங்கில் நட்டும் 622 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. அதேபோல ஷாங்காய் சர்வதேச விமான நிலையத்தில் 652 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
அதிவேக ரயில்கள்
விமானங்கள் மட்டுமின்றி அதிவிரைவு ரயில் போக்குவரத்தும் அங்கு முடங்கி உள்ளது. அனைத்து அதிவிரைவு ரயில் டிக்கெட்களும் கேன்சல் செய்யப்பட்டு உள்ளது. மறு உத்தரவு வரும் வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் சீன மக்கள் மட்டுமின்றி, அங்குள்ள வெளிநாட்டைச் சேர்ந்த பயணிகளும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர்
விளக்கம் இல்லை
இப்படி சீனாவில் குறித்து இணையத்தில் பரவும் தகவல்கள் எதுவும் நல்லதாக இல்லை. அதேநேரம் இப்படிப் பரவும் தகவல்கள் குறித்து சீன ராணுவமோ அல்லது அந்நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகமான குளோபல் டைம்ஸ் எவ்வித விளக்கத்தையும் வெளியிடவில்லை.