12 இடங்களில் பா.ஜ.கவினரை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், அதில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, போலீசார் என்ன செய்து கொண்டுள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் தெரிவித்ததாவது, “பா.ஜ.க எப்போதும் அமைதியை விரும்பும் கட்சி. இதன் காரணமாகவே நாங்கள் அமைதியான முறையில் சென்று கொண்டிருக்கிறோம்.
தி.மு.க.,வினருக்காக மட்டும் முதலமைச்சர் சத்யபிரமாணம் எடுத்து கொள்ளவில்லை. பா.ஜ.,வை சேர்ந்தவர்களுக்கும் முதலமைச்சர் என்ற முறையில் தான் சத்யபிரமாணம் எடுத்து கொண்டுள்ளார். ஆனால் அவரின் செயல்பாடு தற்போது ஓர வஞ்சனையாக உள்ளது.
கடந்த 3 நாட்களாக 12 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், போலீசார் என்ன செய்கின்றனர். ஆனால், இந்த சம்பவங்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
சமூக வலைதளங்களில் பா.ஜ.கவினர் போடும் கருத்துகளுக்கு கைது செய்யும் அக்கறையை உடைய நீங்கள், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நபர்களை கைது செய்வதில் ஏன் அக்கறை காட்டவில்லை. போலீசார் என்ன செய்து கொண்டுள்ளனர்” என்று தமிழக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.