புதுச்சேரி: புதுச்சேரியில் இன்ஃபுளுயன்சா காய்ச்சலால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 7 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 529 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் (ஃப்ளு) வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. வைரஸ் காய்ச்சலை தடுக்க புதுச்சேரி சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனைகளில் சிறப்பு காய்ச்சல் சிகிச்சை பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.
மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும் குழந்தைகள், பெரியவர் என அனைவருக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி, காரைக்காலில் நேற்று ஒரே நாளில் 529 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறியது: ‘‘புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 430, இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 53, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 46 என மொத்தம் 529 குழந்தைகள் காய்ச்சால் பாதிக்கப்பட்டு வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வந்து சிகிச்சை பெற்றனர்.
இதில் ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 43, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 7, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 6 என 56 குழந்தைகள் அதிக காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 142, இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 42, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 17 என 201 குழந்தைகள் மருத்துவமனையில் உள்ள உள்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்கள் என 110 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் புதிதாக 8 பேருக்கு இன்ஃபுளுயன்சா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏற்கனவே இன்ஃபுளுயன்சா தொற்றால் பாதிக்கப்பட்டு 2 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது மொத்த எண்ணிக்கை 10 அதிகரித்துள்ளது.
இதில், ஜிப்மரில் 2 பேரும், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் ஒருவர், காரைக்கால் பொது மருத்துவமனையில் ஒருவர், 2 தனியார் மருத்துவமனைகளில் 6 பேர் என 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருப்பினும் இவற்றில் குழந்தைகள் யாருக்கும் இன்ஃபுளுயன்சா பாதிப்பில்லை. பெரியவர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்ஃபுளுயனசா பாதிக்கப்பட்டுள்ள 10 பேரில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நலமுடன் இருக்கின்றனர். இதற்கு வேண்டிய மருந்துகளும் உள்ளன’’என்று தெரிவித்தார்.