தமிழ் பரப்புரைகழக தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “’தமிழ்’ – வெறும் மொழியல்ல! அது நம் உயிர்!
முத்தமிழறிஞர் – முத்தமிழ் வித்தகர் தலைவர் கலைஞர் அவர்கள், தமிழைப்பற்றி அடிக்கடி பெருமையோடு சொல்லுவார்கள். அதனை நான் பல்வேறு இடங்களில் சொல்லியிருக்கிறேன். அதை இந்த நிகழ்ச்சியிலும் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
“உளங்கவர் ஓவியமே, உற்சாகக் காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுமிழ் புதுநிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனியத் தென்றலே, பனியே, கனியே, பழரசச் சுவையே, மரகத மணியே, மாணிக்கச் சுடரே, மன்பதை விளக்கே என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது. இருந்தாலும் தமிழை தமிழே என்று அழைக்கக்கூடிய சுகம் வேறு எதிலும் இருக்காது.
அத்தகைய தமிழ் வாழும் காலமெல்லாம் நின்று நிலைபெறக் கூடிய தமிழ்ப் பரப்புரைக் கழகத்தைத் தொடங்கி வைப்பதை என்னுடைய வாழ்நாளில் கடமையாக மட்டுமல்ல; என்னுடைய வாழ்நாளில் பெருமையாகவும் நான் கருதிக் கொண்டிருக்கிறேன்.
‘வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ – என்பதை முழக்கமாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு, தமிழ்ப் பாதுகாப்புக் கழகம் தொடங்குவது என்பது முழுமுதல் கடமை!
1999-ஆம் ஆண்டு Tamilnet99 என்ற தமிழ் இணையவழி மாநாட்டின் மூலம் இணையத்தமிழ் தொடர்பான முன்னெடுப்புகளையும், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தோற்றத்தையும் முதல்வர் கலைஞர் அவர்கள் அறிவித்தார். அதன் பின் 5.7.2000 அன்று தமிழ் இணையக் கல்விக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது.
உணர்வால் – உள்ளத்தால் – தமிழால் – நாம் அனைவரும் இணைந்துள்ளோம். அமெரிக்கா, குவைத், ஓமன், நார்வே போன்ற நாடுகளைச் சேர்ந்த நம் உறவுகளும் இணைந்துள்ளார்கள். மொழிக்கு மட்டும்தான் இத்தகைய அன்பால் இணைக்கக்கூடிய ஆற்றல் உண்டு. மொழியால் இணைந்தவர்களை சாதியால், மதத்தால் பிரிக்க முடியாது. தமிழால் ஒன்றிணைய வேண்டிய காலக்கட்டத்தில் தமிழ்ப் பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவின் கனவை – செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கனவை – நிறைவேறும் நாளாக இது அமைந்துள்ளது.
தொண்டு செய்வாய் தமிழுக்கு; துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே ! – என்று வலியுறுத்தி, இந்த இனிய வாய்ப்பைப் பெற்ற இந்த நேரத்தில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.