சிவகாசி மாநகராட்சி காந்தி ரோட்டை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 59). இவர் அப்பகுதியில் தீப்பெட்டி செய்ய பயன்படும் பேப்பர் போர்டு மொத்த விலை கம்பெனி நடத்தி வருகிறார். அதே தாலுகாவில், அண்ணன் தம்பிகளான ரவிச்சந்திரன், சிவக்குமார் ஆகிய இருவரும் தீப்பெட்டி கம்பெனி நடத்தி வருகிறார்கள்.
அண்ணன் தம்பிகளான ரவிச்சந்திரன், சிவக்குமார் இருவரும் தங்களின் தீப்பெட்டி கம்பெனிக்கு பெட்டி செய்ய தேவையான பேப்பர் போர்டுகளை நாராயணசாமியிடம் கொள்முதல் செய்து தொழில் செய்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2018 முதல் 2020ம் ஆண்டு வரை நாராயணசாமியிடம் வாங்கிய சரக்குகளுக்கு கொடுக்கவேண்டிய ரூ.1கோடியே 1 லட்சத்து 80 ஆயிரத்து 680ஐ சகோதரர்கள் இருவரும் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.
இதுகுறித்து நாராயணசாமி கேட்டபோது அவர்கள் இருவரும் சேர்ந்து, நாராயணசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன் தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர், விருதுநகர் 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் புகார்மனு அளித்தார். அதை விசாரித்த நீதிமன்றம், நாராயணசாமி புகாரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸூக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீஸ், வழக்கில் சம்பந்தப்பட்ட சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தது. ரவிச்சந்திரனை தேடி வருகின்றனர்.