செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில் விடிய, விடிய போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா போன்ற அமைப்பு அலுவலகங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்தவர்கள் இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர். சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று, கோவையில் உள்ள பாஜக மற்றும் இந்து முன்னணி அலுவலகங்களில் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. வட மாநிலத்தவர்களின் துணிக்கடைகள் சேதப்படுத்தப்பட்டன. இவ்வாறு கலவரத்தில் ஈடுபடுவதால் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் விதமாக நேற்றிரவு முதல் இராட்டிணங் கிணறு, அந்தோணியர் தேவாலயம், செங்கல்பட்டு-காஞ்சிபுரம் பைபாஸ் சாலை, திருப்போரூர் கூட்ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு தாலுகா மற்றும் நகர காவல் ஆய்வாளர்கள் அசோகன், வடிவேல் முருகன் ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் நள்ளிரவு 2 மணிவரை ஒரு குழுவாகவும் 2 மணி முதல் காலை 6 மணிவரை ஒரு குழுவாகவும் இரவுநேர வாகன சோதனையில் ஒரு குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது இருசக்கர வாகனம் கார், வேன், ஆட்டோ உள்பட அனைத்து வாகனங்களுக்கும் முறையாக ஆவணங்கள் உள்ளதா எனவும் வாகனங்களில் சந்தேகப் படும் படியான நபர்கள் யாரும் செல்கின்றார்களா, ஆயுதங்கள் கொண்டு செல்கின்றார்களா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.