நாளை திருப்பதி திருக்குடை ஊர்வலம்: வடசென்னையில் போக்குவரத்து மாற்றம்… முழு விவரம்

சென்னை: சென்னையில் நாளை திருப்பதி திருக்குடை கவுனி தாண்டுவதால், வட சென்னை பகுதியில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி திருக்குடைகள் சேவா சமிதி அறக்கட்டளை மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இருந்து 21 திருக்குடைகள் உபய உற்சவ ஊர்வலமாக சென்று திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்படுவது வழக்கம்.  கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக திருக்குடை ஊர்வலம் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு திருப்பதி திருக்குடை கவுன் தாண்டுகிறது. இதன் காரணமாக வடசென்னை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வட சென்னைப் பகுதியில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்வதால், வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் நிகழ்ச்சி முடியும் வரை வட சென்னைப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி நாளை காலை 8 மணி முதல் ஊர்வலம் வால் டாக்ஸ் சாலையை கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை,அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. அந்த சாலைகளில் பயணிக்க வேண்டிய வாகனங்கள், ஈ.வெ.ரா. பெரியார் சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பாலம் சாலை, பிரகாசம் சாலையை பயன்படுத்தலாம்.

மாலை 3 மணி முதல் ஊர்வலம் பேசின் பாலத்தை கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை,அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. இந்த வழித்தடங்களில் செல்ல வேண்டிய வாகனங்கள், பேசின் பாலம் சாலை, மின்ட் வழியாக பிரகாசம் சாலை,ராஜாஜி சாலையை பயன்படுத்தலாம்.

ஊர்வலம் மூலகொத்தலம் பகுதியை அடைந்த உடன் பேசின் பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ஊர்வலம் பேசின்பாலம் சாலையில் செல்லும்போது, சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலஸ் சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

ஊர்வலம் ராஜா முத்தையா சாலையில் செல்லும் போது, மசூதி சந்திப்பில் இருந்து சூளை ரவுண்டானா நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள், வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். ஊர்வலம் சூளை நெடுஞ்சாலையில் செல்லும்போது நாராயண குரு சாலை, ஈ.வி.கே சம்பத் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

அவதான பாப்பையா சாலையில் ஊர்வலம் செல்லும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் பெரம்பூர் பேரக்ஸ் சாலை வழியாக செல்லலாம்.

ஊர்வலம் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் செல்லும்போது, புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அந்த வாகனங்கள் நாராயணகுரு சாலை வழியாக செல்லலாம்.

ஊர்வலம் ஒட்டேரி சந்திப்பை அடையும்போது, மில்லர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பிரிக்ளின் சாலை வழியாக ஒட்டேரி சந்திப்பை நோக்கி செல்ல அனுமதியில்லை. அத்தகைய வாகனங்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லலாம்.

இதேபோல ஊர்வலம் ஓட்டேரி சந்திப்பில் செல்லும் போது கொன்னூர் நெடுஞ்சாலை மேடவாக்கம் குளம் சாலை சந்திப்பில் இருந்து ஒட்டேரி சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் மேடவாக்கம் குளம் சாலை வழியாக செல்லலாம்.

ஊர்வலம் கொன்னூர் நெடுஞ்சாலையில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தை அடையும்போது, ஒட்டேரி சந்திப்பு, மேடவாக்கம் குளம் சாலையில் இருந்து கொன்னூர் நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதியில்லை. அங்கு வரும் வாகனங்கள், ஒட்டேரி சந்திப்பில் இருந்து குக்ஸ் சாலைவழியாகவும், மேடவாக்கம் குளம் சாலையில் இருந்து வி.பி காலனி தெரு அல்லது அயனாவரம் சாலை வழியாகவும் செல்லலாம்.

இவ்வாறு  செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.