சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சால் எங்கள் மனதைரியத்தை குறைத்துவிட முடியாது என தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, கே.அண்ணாமலை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “கோயம்புத்தூர் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி எங்கள் சகோதார சகோதாரிகளின் மனதைரியத்தை குறைத்து விடலாம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். இதுபோன்ற அச்சுறுத்தல்கள் சமூகவிரோதிகளுக்கு எதிரான எங்கள் சமூக பணியை மேலும் வேகப்படுத்தும். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதை மக்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை திமுக அரசு உணர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா கண்ணியமற்ற முறையில், தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியது குறித்து, மொத்த தமிழகமும் கொந்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், முதல்வர் மவுனமாக இருக்கிறார்.
தான் பேசியது சரிதான் என ஆ.ராசா மீண்டும் பேசியிருக்கிறார். இதனால் ஆ.ராசாவின் பேச்சு முதல்வரின் ஆசியுடன்தான் பேசப்பட்டது என்ற முடிவுக்கே வர வேண்டியிருக்கிறது. மக்கள் அனைவரும் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என்ற உணர்வுடன், அறவழியில், அகிம்சை போராட்டத்தைத் தொடங்கி விட்டார்கள். அதன் வலிமையை வருகிற தேர்தலில் உணர்வீர்கள்.
தங்களைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் பொய் வழக்குகள் மூலம் எடுக்கப்படும் தமிழக அரசின் கைது நடவடிக்கைகளை மத்திய அரசும் கவனித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் பாஜக தொண்டர்களைக் கைது செய்வதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்பதைக் காவல் துறையும், தமிழக அரசும் புரிந்துகொள்ள வேண்டும். வரும் 26-ம் தேதி பாஜக முன்னெடுப்பால் கோவையில் தொடங்க இருக்கும், அறவழி விழிப்புணர்வு போராட்டங்கள் மூலம், மக்கள் திமுகவுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.