பாப்புலர் பிரண்ட் போராட்டத்தில் வன்முறை கலவரக்காரர்களிடம் இருந்து நஷ்டஈடு வசூல் செய்யுங்கள்: கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்: கேரளாவில் பாப்புலர் பிரண்ட் அமைப்பினரின் முழு அடைப்பு போராட்டத்தில் நடந்த வன்முறையால் ஏற்பட்ட நஷ்டத்தை கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கும்படி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா உட்பட நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அலுவலகங்களில் நடந்த சோதனை, தலைவர்கள் கைதை கண்டித்து கேரளாவில் கடந்த 23ம் தேதி இந்த அமைப்பு முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. அப்போது நடந்த வன்முறையில் 75 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. தனியார் வாகனங்களும் சூறையாடப்பட்டன. ஆர்எஸ்எஸ் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்தது. அப்போது, பேருந்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது. அதன்படி, நேற்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மாநிலம் முழுவதும் 75 அரசு பஸ்கள் சேதப்படுத்தப்பட்டதால், ரூ.50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் நஷ்டம் மேலும் அதிகரிக்கும்,’ என்று கூறப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ‘இந்த நஷ்டத்தை வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும் அல்லது அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்,’ என்று அரசுக்கு உத்தரவிட்டார். மேலும்,  நஷ்டஈடு தொகையை நீதிமன்றத்தில் செலுத்தினால் மட்டுமே, கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

* திட்டமிட்ட வன்முறை
கேரள முதல்வர் பினராய் விஜயன் நேற்று கூறுகையில், ‘பாப்புலர் பிரண்ட் முழு அடைப்பு போராட்டத்தில் கடும் வன்முறைகள் அரங்கேறின. இது, கேரளாவில் சமீப காலத்தில் கேள்விப்படாத ஒன்று. திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது,’ என தெரிவித்தார்.

* முக்கிய பிரமுகர்களை கொல்ல சதி
கேரளாவில் நடத்திய சோதனையின்போது கைது செய்யப்பட்ட 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கொச்சி சிறப்பு நீதிமன்றத்தில் என்ஐஏ மனு தாக்கல் செய்துள்ளது. அதில், ‘கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் அமைப்பினர் கேரளாவில் மாற்று மதத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியதற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளன. அவர்களின் கொலை பட்டியலும் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்களை 7 நாள் காவலில் வைத்து  விசாரிக்க அனுமதிக்க வேண்டும்,’ என கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம், 11 பேரையும் 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க என்ஐஏ.வுக்கு அனுமதி வழங்கியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.