உத்தரகாண்ட் மாநிலம் பாவரி மாவட்டத்தில் பாஜக தலைவராக இருப்பவர் வினோத் ஆர்யா. இவருக்கு யம்கேஸ்வர் தொகுதியில் சொந்தமாக ரிசார்ட் ஒன்று உள்ளது. இந்த ரிசார்ட்டில் ரிஷப்ஷனிஸ்டாக வேலை பார்த்த 19 வயது பெண்ணை கடந்த 18ம் தேதி முதல் காணவில்லை என்று பெற்றோர் போலீசில் புகார் அளித்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து வழக்குபதிவு செய்த போலீசார், பாஜக தலைவரின் மகனான புல்கித் ஆர்யாவிடம் விசாரணை மேற்கொண்டனர். பாஜக பிரமுகரின் மகன் என்பதால் விசாரணையில் சில நாட்களாக தொய்வு ஏற்பட்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து இளம்பெண் வேலை செய்த ரிசார்ட்டின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது சம்பவத்தன்று இளம்பெண் ரிசார்ட்டை விட்டு வெளியே வரவில்லை என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ரிசார்ட் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, புல்கித் ஆர்யா, இளம்பெண்ணை தன்னுடைய ஆசைக்கு இணங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த இளம்பெண் மறுப்பு தெரிவித்ததால், அவரை கடத்திச் சென்றதாக வாக்குமூலம் அளித்தனர். அதுமட்டுமல்லாமல் இளம்பெண்ணை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்ததால் பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.
இதைத்தொடர்ந்து புல்கித் ஆர்யா உள்பட 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இருப்பினும் இளம்பெண் இன்னும் கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து உள்ளூர் மக்கள் புல்டோசர் கொண்டு ரிசார்ட்டை இடிக்கவேண்டும் என்ற கோரிக்கை அம்மாநில முதல்வர் தாமி உத்தரவிட்டதின் பேரில் இரவோடு இரவாக ரிசார்ட் இடிக்கப்பட்டது.
இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக பாஜக பிரமுகரின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.