சென்னை: மொழியால் இணைந்தவர்களை சாதி, மதத்தால் பிரிக்க முடியாது. எனவே, நாம் அனைவரும் தமிழால் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
செம்மொழியான தமிழை உலகம் முழுவதும் வளர்க்கும் நோக்கத்தில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் தமிழ் பரப்புரைக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ‘தமிழ் பரப்புரைக் கழகம்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனுடன் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடநூல்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளையும் அவர் வெளியிட்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழ் என்பது வெறும் மொழியல்ல. அது நம் உயிருக்கு நிகரானது. அத்தகைய தமிழை உலகமெல்லாம் கொண்டு சேர்க்கக்கூடிய தமிழ் பரப்புரைக் கழகத்தை தொடங்கி வைப்பதை பெருமையாகக் கருதுகிறேன். தமிழின் சொத்துகள் பல நூறுஆண்டுகளாக சேகரித்து வைக்கப்படாமல் அழிந்து போய்விட்டது. அந்த தவறு தடுக்கப்பட்டு நமது அறிவுச் சொத்துகள் அனைத்தையும் முழுமையாக டிஜிட்டல் வடிவில் மாற்றிச் சேமித்து வைக்கும் பணியை தமிழ் இணைய கல்விக் கழகம் செய்து வருகிறது.
தமிழர்கள் 30-க்கும் மேலான நாடுகளில் அதிகமாகவும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் வாழ்கின்றனர். அவர்களுக்கு தமிழை சொல்லித் தரவே இந்த பரப்புரைக் கழகம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் 24 மொழிகளில் பாடநூல்களாகவும், 12 மொழிகளில் ஒலிப் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளன. தமிழர்கள் அனைவரும் தமிழில் எழுத, பேச, படிக்க, சிந்திக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ் வளர்ச்சித்துறைக்கும் ரூ.82 கோடி ஒதுக்கி பல்வேறு செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், சமீபத்தில் தமிழகம் வந்த அகில இந்தியத் தலைவர் ஒருவர், தமிழுக்கு திமுக என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழுக்கு திமுக என்ன செய்யவில்லை என்பதுதான் அவருக்கு நமது பதிலாக இருக்க முடியும்.
மொழிக்கு மட்டும்தான் மனிதர்களை அன்பால் இணைக்கும் ஆற்றல் உள்ளது. மொழியால் இணைந்தவர்களை சாதியால், மதத்தால் பிரிக்க முடியாது. எனவே, எத்தகைய நெருக்கடிகள் வந்தாலும் தமிழை தள்ளி வைத்துவிடக்கூடாது. இப்போது முதல்நிலை முதல் பருவப் பாடநூல் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாம் நிலை வரையான பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளன. தேவாரம் உள்ளிட்ட பாடல்களை இசைக்கோவையாக வழங்கவுள்ளோம்.
இந்த தமிழ் பரப்புரைக் கழகத்தின் மூலம் 22 நாடுகள் மற்றும் 20 மாநிலங்களை சேர்ந்த 25 ஆயிரம் மாணவர்கள் பயன்பெறுவார்கள். இதை உலகம் முழுவதும் வாழும் பல்லாயிரக்கணக்கான அயலகத் தமிழ் மாணவர்களுக்குக் கொண்டு செல்லும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்வில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சர்கா.ராமசந்திரன், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், தமிழ் இணையக் கல்விக் கழக இயக்குநர் (பொறுப்பு) வீ.ப.ஜெயசீலன், தமிழ்இணையக் கல்விக் கழக தலைவர்த.உதயசந்திரன், தகவல் தொழில்நுட்பவியல் துறை முதன்மை செயலர் நீரஜ் மித்தல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.