சரிவை நோக்கி செல்லும் சீன பொருளாதாரம்| Dinamalar


‘உரலுக்கு ஒரு பக்கம் இடி; மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி’ என்பதை போல, சீனாவுக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிக்கல்கள் அதிகரித்து வருகின்றன.
கொரோனாவுக்கு முன் இருந்த சீனாவின் வளர்ச்சிக்கும், இப்போதைய நிலைக்குமான வித்தியாசம், அதிர்ச்சி அளிப்பதாகவே உள்ளது. இதன் காரணமாக, சீன மக்களின் மனங்களிலும் அண்மைக் காலமாக அதிருப்தி அதிகரித்து வருகிறது.கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக, ஆசிய வளரும் நாடுகள், சீனாவை விட வேகமான வளர்ச்சியை காணும் என, ஆசிய மேம்பாட்டு வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் மேலும் பல மதிப்பீட்டு நிறுவனங்கள், சீனாவின் வளர்ச்சி குறித்த தங்கள் கணிப்பை தொடர்ந்து குறைத்து வருகின்றன.சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு ஆண்டில், 3.5 சதவீதமாக இருக்கும் என்றும், இது, கடந்த 40 ஆண்டுகளில் குறைவான வளர்ச்சியாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.புதிதாக வெளிவரும் பொருளாதார அறிக்கைகள், சீனாவின் வளர்ச்சியை குறைத்து கணித்திருப்பதுடன், உலக வர்த்தக வளர்ச்சியில் சீனாவின் பங்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துவிடும் எனவும் எச்சரிக்கின்றன.

மின்சார பற்றாக்குறை, கொரோனா பரவல் போன்றவை அந்நாட்டின் உற்பத்தி வளர்ச்சியை ஒரு கை பார்த்துவிட்டன. செப்டம்பரில் தொழில் துறை உற்பத்தி மேலும் மோசமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.கடந்த 2016 முதல் 2021 வரையிலான காலத்தில், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வளர்ச்சியில் முதலிடத்தில் இருந்த சீனா, 2021 – 2026 காலகட்டத்தில், வேறு ஆசிய நாடுகளால் பின்னுக்குத் தள்ளப்பட்டு விடும் என்கின்றனர் நிபுணர்கள்.கொரோனா தொற்றுக்கு அடுத்து, சீன பொருளாதாரத்தை பாதிக்கும் மிகப்பெரிய விஷயமாக உள்ளது, அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறை.சமீப காலத்தில் இத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு, சீன பொருளாதாரத்தை அசைத்துள்ளது.

சி.சி.பி., எனப்படும் சீனா கட்டுமான வங்கி நிறுவனம், ரியல் எஸ்டேட் ‘டெவலப்பர்’களிடம் இருந்து சொத்துக்களை வாங்க, 35 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட உள்ளது.அரசும் வீடுகளை வாங்குவதற்கான வட்டியை குறைப்பது, டெவலப்பர்களுக்கு தேவையான நிதியுதவி செய்வது என பல நடவடிக்கைகளில் இறங்கி, பொருளாதாரத்தை பாதுகாக்க முயற்சிக்கிறது. வாடகை வீடுகள் தொடர்பான நிலுவையில் உள்ள வங்கிக் கடன்களும் மலை போல அதிகரித்து வருகின்றன.சீனாவில் குழந்தை பிறப்பு குறைந்து வருவது கூட, அதன் பொருளாதார சரிவைக் காட்டுகிறது என கூறப்படுகிறது. நாட்டின் பொருளாதார நிச்சயமற்ற நிலை, எதிர்கால நம்பிக்கையை குறைப்பதாக இருப்பதால், குழந்தைகள் பெற்றுக் கொள்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே, சீனாவின் கணிக்க இயலாத நடவடிக்கைகள், நம்பகத்தன்மை குறைந்து வருவது, திறன் குறைந்து வருவது ஆகியவை காரணமாக, பல உலகளாவிய நிறுவனங்கள், சீனாவிலிருந்து வெளியேறும் முயற்சியில் இறங்கி உள்ளன.

குறிப்பாக உலக நிறுவனங்களின் பார்வை, சீனாவிலிருந்து இந்தியாவின் பக்கம் திரும்ப துவங்கி உள்ளது. இதுவும், சீன பொருளாதாரத்தை புரட்டி போட்டு விடும் என கருதப்படுகிறது.இன்னொரு பக்கம் இயற்கையும், சீனாவுக்கு எதிரான சீற்றத்தை காட்டி வருகிறது. அங்கு நிலவும் கடும் வெப்ப அலைகளால், 66 நதிகள் காய்ந்து போய்விட்டதாகவும், பல பகுதிகளில் பயிர்கள் காய்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

மொத்தத்தில் வளர்ச்சி நின்று போய் உள்ளது. இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வீடுகளுக்கான சந்தை சரிவை சந்தித்துள்ளது. வினியோக பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இப்படி அனைத்து முனைகளிலும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு சீனா தள்ளப்பட்டுள்ளது என்பது தான் உண்மை.நிலைமை சரியாவதில் பிரச்னைகள் நீடித்தால், அரசியல் ரீதியாக கவனத்தை மடைமாற்றம் செய்யும் முயற்சியை கூட, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளக்கூடும் என்றும் புவிசார் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உச்சகட்டமாக அனைத்துக்கும் காரணம் அதிபர் ஜிங்பிங் என்று கைகாட்டி, மக்களை சாந்தப்படுத்த முயற்சிக்கலாம் என்கின்றனர். தற்போது சீனாவிலிருந்து வெளியாகும் தகவல்கள், இதைத் தான் உறுதிப்படுத்துகின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.