புதுடெல்லி: பீகாரில் பாஜ.வுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்த ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல்வருமான நிதிஷ் குமார், கடந்த மாதம் கூட்டணியில் இருந்து விலகினார். ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளார். சமீபத்தில் பீகாரில் நடந்த பேரணியில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ.வின் முதுகில் நிதிஷ் குமார் குத்தி விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், ‘காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மடியில் அமர்ந்து கொண்டு, தனது பிரதமர் கனவை நிறைவேற்றிக் கொள்ள துடிக்கிறார்,’ என்றும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை நிதிஷ் குமாரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும் டெல்லியில் இன்று சந்தித்து பேசுகின்றனர் இது பற்றி லாலு நேற்று அளித்த பேட்டியில், ‘பீகாரில் பாஜ.வின் ஆட்சி நீக்கப்பட்டதால், அமித்ஷா முழு பைத்தியமாகி விட்டார். 2024 மக்களவை தேர்தலிலும் பாஜ படுதோல்வியை சந்திக்கும். எனவேதான், அமித்ஷா அங்கும் இங்குமாக ஓடி காட்டாட்சியை பற்றி பேசுகிறார். அவர் குஜராத்தில் ஆட்சியில் இருந்தபோது என்ன நடந்தது? அங்கு காட்டாட்சி தானே நடந்தது?” என்றார்.