மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா(Rewa) தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் ஜனார்தன் மிஸ்ரா(Janardan Mishra). இவர் கடந்த 22-ம் தேதி தனது தொகுதிக்கு உட்பட்ட கஜூஹா என்ற பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் மரம் நடு விழாவில் பங்கேற்றார்.
அப்போது பள்ளி வளாகம் முழுவதும் சுற்றிப்பார்த்த எம்.பி கழிவறை அசுத்தமாக இருப்பதை கண்டு வேதனையடைந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர், கையுறை, பிரஷ்கள் உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி வெறும் கைகளால் கழிவறையை சுத்தம் செய்ய தொடங்கியுள்ளார். இதனைக் கண்டு கட்சியினர் மற்றும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில், இது மக்களை ஏமாற்றும் நாடகம் என எதிர்க் கட்சியினர் சிலர் கருத்து பதிவிட்டு விமர்சனம் செய்து வந்தனர்.
இந்த நிலையில், அந்த வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள எம்.பி ஜனார்தன் மிஸ்ரா, பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ கனவு பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தும் நோக்கிலேயே தான் கழிவறையை சுத்தம் செய்ததாக விளக்கமளித்துள்ளார்.