விருத்தாசலம்: காரில் மது போதையில், முதல்வர் ஸ்டாலின் படத்தின் முன்பு மது பாட்டிலை காண்பித்து, ஆட்டம் போட்ட அண்ணா கிராம ஒன்றிய திமுக கவுன்சிலரின் செயல் பொதுமக்கள் மட்டுமின்றி திமுகவினரையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அண்ணா கிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்கவரப்பட்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் குமரகுரு. இவர் வழக்கறிஞராகவும் பணி செய்து வருகிறார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் புதுச்சேரி சென்ற இவர், அங்கு மது அருந்திவிட்டு, மது பாட்டில்கள் சிலவற்றை வாங்கிக் கொண்டு கார் ஒன்றில் பயணம் செய்தவாறே ஊருக்கு திரும்பியுள்ளார்.
அப்போது, கையில் மது பாட்டிலுடன் உற்சாகமாக, ‘ஸ்டாலின் தான் வராரு… விடியல் தரப் போராரு…’ என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, கூடவே தானும் சேர்ந்து பாடிக் கொண்டே, காரில் முன்புறத்தில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் படத்தின் முன்பு மது பாட்டில்களை காண்பித்து கும்மாளத்துடன் ஆட்டம் போட்டபடி சென்றிருக்கிறார். இந்த நிகழ்வை காரின் பின்புறம் அமர்ந்துள்ள ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது: மேல்கவரப்பட்டு தட்டாம்பாளையம் ஒன்றிய திமுக கவுன்சிலர் குமரகுரு மற்றும் திமுக கிளைச்செயலாளர் தாமோதரன் என்பவர் கட்சிப் பாடலைப் பாடியபடி குடித்தபடி, ஆட்டம் போட்டுவிட்டு நேராக அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த கள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த திமுக கவுன்சிலர் ராஜசேகர் என்பவரிடமும், கீழ் கவரப்பட்டு அதிமுக கவுன்சிலர் நளினியின் கணவர் பிரகாஷ் என்பவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பிரகாஷை விரட்டி தடியால் அடித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து ராஜசேகர் மற்றும் பிரகாஷ் ஆகியோர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீஸார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லாவிடம் கேட்டபோது அவர் பேச முன்வரவில்லை.
இதுபற்றி குமரகுரு தரப்பில் கேட்டபோது, திமுக உட்கட்சித் தேர்தலில் ஒன்றிய செயலாளர் பதவிக்கு வெங்கட்ராமன், குமரகுரு, மதனகுரு ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியில் குமரகுருவை வெளியேற்றும் விதமாக இந்த வீடியோ வெளியிடப்பட்டு வருகிறது.
கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்றதையொட்டி கொடைக்கானல் சென்றபோது, குமரகுரு மது அருந்தியதாகவும் அந்த வீடியோவை தற்போது, அவருக்கு எதிரானோர் வெளியிட்டு, அவருக்கும் கட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து குமரகுருவிடம் விளக்கம்பெற தொடர்பு கொண்டபோது அவர் பேச முன்வரவில்லை.