வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கடலுார்: தமிழகத்தில் கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத வகையில், நேற்று கடலுார், புதுச்சேரியில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட் பதிவானது.
தமிழகத்தில் கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அதிகபட்ச வெயில் இருக்கும். அதன் பின், படிப்படியாக வெயில் குறைந்து, மிதமான வெயில், மழைத் துாறல் இருக்கும்.கடலுார், புதுச்சேரியில் கடந்த 8ம் தேதி வரை, அடிக்கடி மழை பெய்து வந்தது. அதன் பின்னர் மழை பொழிவது நின்றது. தொடர்ந்து கடும் வெயில் காரணமாக பகல் நேரத்தில் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் வீட்டிற்குள் முடங்கினர்.
இதற்கிடையே, கடந்த 11ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வந்தது. அதன் காரணமாக கடலுார் உள்ளிட்ட துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. காற்றழுத்த தாழ்வு காரணமாக காற்றில் ஈரப்பதம் குறைந்தது.வழக்கமாக செப்டம்பர் மாதங்களில் அதிகபட்சமாக 90 டிகிரி பாரன்ஹீட் வெயில், சில நாட்களில் மழை என பருவ நிலை கலந்திருக்கும். அதனால் இந்த காலங்களில் வெயிலை மக்கள் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில், நேற்று அதிகபட்சமாக கடலுாரில் 99.8 டிகிரியும், புதுச்சேரியில் 100.4 டிகிரி வெயிலும் பதிவானது.நேற்று காலையிலேயே வெயில் 100 டிகிரியை தொட்டதால் மக்கள் புழுக்கத்தினால் அவதிப்பட்டனர். இதுபோன்ற அதிகபட்ச வெயில் தமிழகத்தில் வேறு எங்கும் பதிவாகவில்லை.
இது குறித்து வானிலையாளர் பாலமுருகன் கூறுகையில், ‘கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில் இது போன்ற காலங்களில் அதிகபட்சமாக 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது கிடையாது. இதற்கு காரணம், வடக்கு திசையில் இருந்து வறண்ட காற்று தொடர்ந்து வேகமாக வீசிக்கொண்டிருக்கிறது. இதனால், வெப்பம் அதிகரித்து உள்ளது. வழக்கமாக இந்த மாதங்களில் அதிகபட்சமாக 93 டிகிரி வரை தான் வெயில் இருந்துள்ளது’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement