கோவை: கோவையில் பொது அமைதி, மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்துக் கட்சியினர் ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு போன்ற பலவித காரணங்களுக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து கோவைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகம். கோவையில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் உள்ளன. வெட்கிரைண்டர், மோட்டார், பம்பு செட் தயாரிப்பு, உதிரிபாகங்கள் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் கோவை முதன்மையாக உள்ளது.
தொழில்துறையில் சீரான வேகத்தில் கோவை வளர்ச்சியடைந்து வந்த சூழலில், 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம், கோவையை பின்னோக்கி தள்ளியது. அனைத்து துறைகளிலும் இது எதிரொலித்தது. குண்டுவெடிப்பு தாக்கத்திலிருந்து மீண்டு கோவை தொழில் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பழைய நிலையை அடைய பல ஆண்டுகள் பிடித்தன. இச்சூழலில், கடந்த சில நாட்களாக கோவையில் நடக்கும் அசம்பாவிதங்கள் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 22-ம் தேதி கோவை போத்தனூர் உட்பட நாடு முழுவதும் பிஎஃப்ஐ அலுவலகம், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனை நடத்தினர். அன்றைய தினம் இரவு, காந்திபுரம் விகேகே மேனன் சாலையில் உள்ள பாஜக மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுவீசினர். அதன் தொடர்ச்சியாக காந்திபுரம், குனியமுத்தூர், கோவைப்புதூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இந்து இயக்க பிரமுகர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், கடைகள், வாகனங்களை குறி வைத்து மர்மநபர்கள் பெட்ரோல் குண்டுவீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.
இச்சம்பவங்களின் தாக்கம் தொடராமல் தடுக்க கோவை மாநகர், புறநகரில் காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் கடந்த 2 நாட்களாக கோவையில் முகாமிட்டு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார். தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு ஆகியோர் காணொலி வாயிலாக ஆட்சியர், காவல் ஆணையர், மேற்கு மண்டல ஐஜி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர்.
இதுதொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர். சில வழக்குகளில் குற்றவாளிகளின் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். இச்சம்பவங்கள் தொடர்பாக சமூகவலைதளங்களில் தவறான, 2 தரப்பினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் தகவல்களை பரப்புபவர்கள் மீதும் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மாநகர் முழுவதும் 3,500 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுஉள்ளனர். 28 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன’’ என்றார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறும்போது, ‘‘தலைமைச் செயலாளருடன் நடந்த சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக் கூட்டத்தில் கோவையில் நடந்த சம்பவங்கள் விவாதிக்கப்பட்டன. கோவையில் பதற்றம், அச்சமடைய வேண்டிய சூழல் இல்லை. மத நல்லிணக்கம் தொடர்பாக 92 ஜமாத் நிர்வாகிகள், இந்து அமைப்பினருடன் தனித்தனியாக கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்’’ என்றார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கோவை பிரிவு தலைவர் ஸ்ரீராமுலு கூறும்போது,‘‘ தொழில்துறையின் சீரான வளர்ச்சிக்கு அமைதியான சூழல் அவசியம்’’ என்றார். பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறும்போது, ‘‘நாங்கள் மத நல்லிணக்கத்துக்கு முக்கியத்தும் தருபவர்கள். கோவையில் நடந்த அசம்பாவித சம்பவங்களில் தொடர்புடைய நபர்கள் மீது காவல்துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும்’’ என்றார்.
அதேபோல், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் அனைத்து கட்சி பிரமுகர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அதில், ‘‘அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது.