ராஜஸ்தான் முதல்வர் ஆகிறார் சச்சின் பைலட் – வழி விடுகிறார் அசோக் கெலாட்!

ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக இளம் தலைவர் சச்சின் பைலட் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அகில இந்திய
காங்கிரஸ்
கட்சித் தலைவர் பதவிக்கு, வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், 19 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில், காந்தி குடும்ப உறுப்பினர்கள் போட்டியிட மறுத்துள்ளனர். அவர்களிடம், மூத்தத் தலைவர்கள் பல முறை வலியுறுத்தியும் அதனை அவர்கள் ஏற்கவில்லை. இந்த முடிவில் உறுதியாக இருப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்து விட்டார். இதனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் சூடு பிடித்துள்ளது.

இந்தத் தேர்தலில், ஜி – 23 அதிருப்தி குழு சார்பில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சசி தரூர், சோனியா காந்தி குடும்பத்தின் விசுவாசியான ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்காக, தேர்தல் படிவங்களையும் சசி தரூர் வாங்கி உள்ளார். அவர், வரும் 30 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. அசோக் கெலாட்டிற்கு சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவு இருப்பதால், கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட அவருக்கே அதிக வாய்ப்பு இருக்கிறது.

உதய்பூரில் நடைபெற்ற சிந்தனை மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, காங்கிரஸ் கட்சியில், ஒருவர் ஒரு பதவியில் மட்டுமே இருக்க முடியும். அதன்படி, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ள ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் பதவியை தானே வைத்துக் கொள்வதாக அசோக் கெலாட் கூறிய தகவலை, ராகுல் காந்தி திட்டவட்டமாக மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று மாலை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் அசோக் கெலாட், இளம் தலைவர் சச்சின் பைலட், மூத்தத் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, அஜய் மக்கான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதில், ராஜஸ்தான் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, சச்சின் பைலட்டை, அசோக் கெலாட் முன்மொழிய உள்ளதாகக் கூறப்படுகிறது. முதலமைச்சர் பதவிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டிற்கு, தற்போது வரம் கை கூடி வந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த அதிரடி நடவடிக்கை, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இளம் தலைவராக வலம் வரும் சச்சின் பைலட்டிற்கு ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் ஆதரவு இருக்கிறது. இவரை முன்னிறுத்தியே சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த மாற்றம், ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சியை தருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.