வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி, புதுச்சேரியில் 10 பேரிடம் ரூ.45.5 லட்சம் வசூலித்து மோசடி செய்த பெண்ணை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியை சேர்ந்த 28 வயது பெண், கடந்த ஜூலை மாதம் இணையதளத்தில் வேலை தேடினார். அதில் கிடைத்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு பேசினார். எதிர்முனையில் பேசியவர், அயர்லாந்து நாட்டில், பிரபல நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரி பணி வாங்கித் தருவதாக கூறி, ரூ.3.50 லட்சம் கேட்டார். அதன் பேரில், போனில் பேசிய நபர் கூறிய வங்கிக் கணக்கில், அந்த பெண் ‘ஜி பே’ மூலம் ரூ.3.5 லட்சம் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, போன் நபர் கூறியபடி அந்த பெண் நேர்காணலுக்கு டில்லிக்கு சென்று, விசாரித்தபோது, அப்படி ஒரு அலுவலகமே இல்லை என தெரிய வந்தது. சந்தேகமடைந்த அந்த பெண், பணம் பெற்ற நபரை போனில் தொடர்பு கொண்டபோது சரியாக பதில் அளிக்கவில்லை.
இதுகுறித்து அப்பெண், புதுச்சேரி டி.ஜி.பி., மனோஜ்குமார் லாலிடம் கடந்த 20ம் தேதி புகார் அளித்தார்.அவரது உத்தரவின்பேரில், குற்றப் புலனாய்வு சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா மேற்பார்வையில், எஸ்.பி., பழனிவேல் தலைமையில், சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, ஏழுமலை உள்ளிட்ட 10 பேர் கொண்ட தனிப்படை குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் கிடைத்த தகவலின் பேரில், கோவையில் பதுங்கியிருந்த தஞ்சாவூரை சேர்ந்த நாகம்மை,47; என்பவரை நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.அதில், நாகம்மை மற்றும் அவரது மகன் பிரபாகரன், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, போலி வேலைவாய்ப்பு இணையதளம் மூலம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, புதுச்சேரியை சேர்ந்த பெண் உள்ளிட்ட 10 பேரிடம், ரூ.45.5 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார், நாகம்மையிடம் இருந்து போலி பாஸ்போர்ட், விசா, முத்திரை, அரசு ஆவணங்கள், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
நாகம்மையை நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய பிரபாகரனை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட நாகம்மை மற்றும் தலைமறைவாக உள்ள பிரபாகரன் சேர்ந்து கடந்த 2018ம் ஆண்டு, சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த 25 பேரை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக போலி பாஸ்போர்ட் கொடுத்து மோசடி செய்த வழக்கு, கோவை குற்றப்பிரிவு போலீசில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றாக விசாரித்து செல்லுங்கள்
சீனியர் எஸ்.பி., ‘அட்வைஸ்’சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா கூறுகையில், ‘வெளிநாட்டில் பணி தேடும் இளைஞர்கள் மற்றும் பெண்கள், விண்ணப்பிக்கும் முன், ஏஜன்ட் அலுவலகத்தில் நேரடியாக சென்று பார்க்க வேண்டும்.ஏற்கனவே அந்த ஏஜன்ட் மூலம் யாராவது வெளிநாட்டில் பணிக்கு சென்று சேர்ந்துள்ளனரா என உறுதி செய்த பின்பே விண்ணப்பிக்க வேண்டும்’ என கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்