கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் 21 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தமது கட்சி வளைத்துக் கொண்டிருப்பதாக பாஜகவின் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக அல்லாத மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பாஜக தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜகவின் இந்த ஆபரேஷன் தாமரை என்ற அரசியல் சித்து விளையாட்டுகள் அரங்கேறி இருக்கின்றன.
அண்மைகாலமாக டெல்லி, பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசுகளைக் கவிழ்ப்பதில் பாஜக தீவிரம் காட்டுவதாக அக்கட்சி எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இதனை பகிரங்கமாக கூறி இருந்தார். ஒவ்வொரு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ20 கோடி தருவதாக பாஜக பேரம் பேசுகிறது எனவும் கூறப்பட்டது. இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆட்சியைக் கவிழ்க்கவும் பாஜக பேரம் பேசுவதாக கூறப்பட்டது. இதனால் தமது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அண்டை மாநிலத்துக்கு தப்பி சென்றார் ஹேமந்த் சோரன்.
மேற்கு வங்க மாநிலத்திலும் கடந்த சில ஆண்டுகளாகவே ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களை எப்படியாவது வளைக்கலாம் என கணக்குப் போட்டு வருகிறது பாஜக. ஆனால் பாஜக எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள்தான் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவி வருகின்றனர். ஒருசில நேரங்களில் அடுத்த நிமிடமே மமதா ஆட்சி கவிழப் போகிறது என்ற போக்கில் 50 எம்.எல்.ஏக்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர் என்றெல்லாம் பாஜக தலைவர்கள் அடித்து விடுவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் பாஜகவின் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, கொல்கத்தா பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அக்கூட்டத்தில் பேசிய மிதுன் சக்கரவர்த்தி, திரிணாமுல் காங்கிரஸின் 21 எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தேன். அதில் இப்போதும் நான் உறுதியாகவே இருக்கிறேன். மமதா பானர்ஜியால் 5 ஆண்டுகாலம் ஆட்சி செய்ய முடியாது. 2024-ம் ஆண்டு முன்னதாகவே மமதா ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றார்.
ஆனால் மிதுன் சக்கரவர்த்திக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலடி தந்துள்ளது. இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் குணால் கோஷ் கூறுகையில், பாஜக எம்.எல்.ஏக்களைப் போல விற்பனைக்குரியவர்கள் அல்ல எங்கள் திரிணாமுல் எம்.எல்.ஏக்கள். இது பாஜகவில்தான் பஞ்சாயத்தை ஏற்படுத்தும் என்றார்.