உத்தர பிரதேசம் மாநிலம், கான்பூரில் வசித்து வந்தவர் விம்லேஷ் தீட்சித் . 52 வயதான இவர் வருமான வரித்துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவ்வாறு இருக்க ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அலுவலகம் சென்ற விம்வேஷ் தீட்சித் அங்கே நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கியுள்ளார்.
இதையடுத்து அவரது சக பணியாளர்கள் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவரது உடலை எடுத்துச்செல்ல விம்லேஷ் தீட்சித்தின் உறவினர் மற்றும் மனைவிக்கு தகவல் கூறப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த மனைவி பூஜா ராணி, விம்லேஷின் உடலை பெற்றுக்கொண்டு, சொந்த ஊருக்கு செல்வதாக கூறிச்சென்றுள்ளார்.
இதனால் அலுவலக பணியாளர்களும் அதன்பின்னர் என்னவானது என்று தெரியாமல் இருந்துள்ளனர். ஆனால் 18 மாதங்கள் கடந்தும் விம்லேஷின் பென்ஷன் பணத்தை பெற்றுக்கொள்ள அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த அலுவலகத்தினர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத விஷயம் நடந்துள்ளது. அவரது உடல் 18 மாதங்களாகியும் தகனமோ, இறுதிச்சடங்கோ செய்யப்படாமல் கட்டிலில் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அலுவலகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் விசாரித்ததில், விம்லேஷ் – பூஜா ராணிக்கு திருமணமாகி 20 வருடங்களாக குழந்தைகள் இல்லை என்றும், இதனால் கணவன் மீது பூஜா ராணிக்கு அளவில்லாத பாசம் இருந்ததாகவும் தெரிய வந்தது.
இந்த அன்பின் உச்சமாக விம்லேஷ் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் பூஜா ராணியின் மனம் அவர் உயிருடன் கோமாவில் இருப்பது போல் எண்ணிக்கொண்டு கற்பனையில் 18 மாதங்களாக இருந்துள்ளது.
விம்லேஷின் மனைவி பூஜா சற்று மன நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கணவரின் அழுகிய பிணத்துடன் 18 மாதங்கள் அவர் வாழ்ந்துள்ளார். கணவரின் மீதான காதல் தினமும் கங்கை நதி நீரை கணவரது உடலில் தெளித்து அவர் கோமாவில் இருந்து மீண்டு வருவார் என்றும் பூஜாவை நம்ப வைத்துள்ளது.
இதையடுத்து, அலுவலர்கள் மருத்துவரை அழைத்து வந்து பூஜாவிடம் பேசி அவரது கணவர் இறந்துவிட்டார் என்பதை நம்ப வைத்தபிறகே 18 மாதங்களாக அழுகிய நிலையில் இருந்த அவரது உடல் மயான பூமிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இவ்வாறு இறந்த ஒருவரின் உடலை கோமாவில் உள்ளார் என்று நம்பி 18 மாதங்கள் மனைவி பாதுகாத்து வந்த சம்பவம் கான்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.