மும்பை: மாலை நேரங்களில் செல்போன், டி.வி. உள்ளிட்ட எலக்ட்ரானிக் சாதனங்களை தவிர்க்கும் முறையை மகாராஷ்டிராவிலுள்ள ஒரு கிராமமக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது மோஹித்யாஞ்சே வத்காவோன் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் மாலை 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை செல்போன், டி.வி. உள்ளிட்ட அனைத்து விதமான எலக்ட்ரானிக் சாதனங்களையும் அணைத்து வைத்துவிடுகின்றனர்.
இந்த ஒன்றரை மணி நேரத்தில் அவர்கள் புத்தகம் படிப்பது, பாடப்புத்தகங்களில் எழும் சந்தேகங்களை அடுத்தவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வது, பெற்றோர் உறவினரிடம் தெரியாத விஷயங்களைக் கேட்டுப் பெறுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு 7 மணியானதும் கிராமத்தில் ஒரு சைரன் ஒலி எழுப்பப்படும். இந்த சத்தம் ஒலிக்கப்பட்டதும், கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் தங்களது செல்போன்களை அணைத்து விடுகின்றனர். மேலும் டி.வி., டேப்லட் கம்ப்யூட்டர், கம்ப்யூட்டர், லேப்-டாப் உள்ளிட்ட சாதனங்கள் அனைத்தையும் அணைத்து வைத்துவிடுகின்றனர். மேலும் எந்தவிதமான சமூக வலைதளங்களில் இந்த ஒன்றரை மணி நேரத்துக்கு இருப்பதில்லை. இரவு 8.30 மணிக்கு மீண்டும் சைரன் ஒலி எழுப்பப்பட்டதும் அவர்கள் செல்போன்களை உயிர்ப்பிக்கின்றனர்.
இதுகுறித்து கிராம பஞ்சாயத்து தலைவர் விஜய் மோஹிதே கூறியதாவது:
சமூக வலைதளங்களில் மக்கள் மூழ்கி விடுவதைத் தடுக்கவும், நவீன உலகிலிருந்து அவர்களுக்கு விடுதலை தரவும் இந்த முயற்சியைத் தொடங்கினோம். எனது முடிவை அனைவரும் ஏற்றுக்கொண்டு அந்த ஒன்றரை மணி நேரத்துக்கு யாரும் செல்போன், டி.வி. பக்கம் செல்வதில்லை. டிஜிட்டல் நச்சு உலகத்திலிருந்து அவர்கள் தற்போது கல்வி பயில்தல், அர்த்தமுள்ள விவாதங்களில் பங்கேற்றல் என மாறி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.