புதுக்கோட்டை: காங்கிரஸ் கட்சிக்கு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், கட்சியை இயக்கும் சக்தியாக ராகுல் காந்தி திகழ்வார் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பி.யுமான சு.திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைத்தால்தான் வளர்ச்சி பாதைக்கு செல்லும் என்று பாஜக தேசியத் தலைவர் நட்டா கூறியிருக்கிறார். அதேசமயம், கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, மனிதவள மேம்பாடு, தொழில் உள்ளிட்டவற்றில் தமிழகம் மேம்பட்டிருப்பதாக தமிழக ஆளுநர் ரவி புகழாரம் சூட்டியுள்ளார். இதைக் கேட்ட பிறகாவது நட்டா தனது கருத்தை மாற்றிக் கொள்வார் என நம்புகிறேன்.
இந்த முறை காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேரு குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடுவதில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு புதிதல்ல. நேரு குடும்பத்தைச் சாராத 20-க்கும் மேற்பட்ட தலைவர்கள் அகில இந்திய தலைவர்களாக இதுவரை இருந்துள்ளனர்.
ஆனாலும், காந்தி எவ்வாறு தலைவராக இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சியை அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாரோ, அதேபோன்று நேரு குடும்பத்தைச் சாராதவர் தலைவரானாலும் ராகுல் காந்தி கட்சியை இயக்கும் சக்தியாக திகழ்வார் என்றார்.