பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா: ரெய்டு பின்னணி என்ன?

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டுகளும், அதன் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ்., பாஜக நிர்வாகிகள் வீடுகளில் நிகழ்த்தப்படும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டதாகவும், இதற்காக பயிற்சி முகாம் ஒன்றை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் தனிநபர்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தும் வகையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரிப்பதில் அந்த அமைப்பு ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ள அமலாக்கத்துறை, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்றாலும், மத்திய விசாரணை அமைப்புகள் இணைந்து நாடு தழுவிய அளவில் இத்தகைய மாபெரும் சோதனையை நடத்தியிருப்பது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது. இந்த சோதனையை கண்டித்து அந்த அமைப்பினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம். இவர்கள் மாணவர்களைப் போலவும், மனித உரிமை இயக்கம் போலவும் அரசியல் இயக்கம் போலவும் முகமூடிகளை அணிந்துகொண்டு நம் நாட்டில் இயங்கி வருகிறார்கள். தீவிரவாத இயக்கங்களுக்கு ஒரு பின்புலமாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது. பல நாடுகளுக்குத் தீவிரவாதத்துக்கு ஆட்களை அனுப்பும் இயக்கமாகவும் உள்ளது.” என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதேபோல், மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் நடந்த வன்முறை சம்பவத்துக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நிதியுதவி அளித்ததாக அம்மாநில பாஜக தலைவர் குற்றம் சாட்டினார்.

இதனிடையே, பிரதமர் மோடியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக ரஷ்யாவில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாகவே இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.100 கோடி பணப்பரிமாற்ற வழக்கில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டார். அந்த பணம் நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் கிளைக்கு அந்த பணம் கொடுக்கப்பட்டதாகவும், அதற்கான சோதனைதான் இது எனவும் சொல்லப்படுகிறது.

நேஷனல் டெவலப்மென்ட் ஃப்ரன்ட் என்ற அமைப்பு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா என்ற பெயரில் புதிய அமைப்பாக 2006ஆம் ஆண்டில் மாறியது. இது ஒரு இஸ்லாமிய அமைப்பு. நாடு முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மனித உரிமைகளுக்காக பாடுபடும் இயக்கமாகவும் உள்ளது. இந்த அமைப்பின் அரசியல் பிரிவாக இந்திய சமூக ஜனநாயகக் கட்சி 2009ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்த அமைப்பின் மீது ஏரளமான குற்றச்சாட்டுகளை பாஜகவினர் முன்வைத்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் இந்த அமைப்புமீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

மத்திய விசாரணை அமைப்புகளின் இந்த சோதனைகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தடை செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு ஜார்கண்ட் மாநில அரசு இந்த அமைப்பைத் தடை செய்தபோது 2018ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றம் அந்த தடையை நீக்கியது என்பது கவனிக்கத்தக்கது.

சமீபத்திய சோதனைக்கு சதித்திட்டம், சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அண்மைக்காலமாகவே இந்த அமைப்பு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருவதாக உளவு அமைப்புகள் மத்திய அரசுக்கு ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த 21ஆம் தேதி சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட மிகப்பெரிய பேரணியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் நடத்தினர். இந்த பின்னணியிலேயே சோதனைகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதுஒருபுறமிருக்க, தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., பாஜக நிர்வாகிகள் வீடுகளில் நிகழ்த்தப்படும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த சம்பவங்களுக்கு பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புதான் காரணம் என பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர். “ராமநாதபுரம், திண்டுக்கல், திருப்பூர் ஆகிய இடங்களில் மீண்டும் PFI குண்டு வீச்சு. தமிழக அரசு மற்றும் காவல்துறை மௌனம்.” என பாஜக மூத்த நிர்வாகி ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆனால், இந்த சம்பவங்கள் அனைத்தும் பாஜகவினரால் திட்டமிட்டு நடத்தப்படுவதாக எதிர்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர். “இனி எந்த பாஜக காரர் வீட்டில் பெட்ரோல் குண்டு வெடித்தாலும் முதலில் அவரையே பிடித்து உள்ளே வைத்து விசாரித்து FIR போட்டால் போதும்.” என இதற்கு முன்னர் நடைபெற்ற இதுபோன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி திமுக செய்தித்தொடர்பாளரும் கவிஞருமான சல்மா குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.