திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.85,705 கோடி மதிப்புள்ள அசையா சொத்து உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி. சுப்பாரெட்டி தெரிவித்தார்.
திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமையில் அறங்காவலர் குழுக்கூட்டம் நடந்தது. இதில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் ஒய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாமானிய பக்தர்களை கருத்தில் கொண்டு பல தீர்மானங்கள் ஒருமனதாக எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிரம்மோற்சவ விழா மற்றும் புரட்டாசி மாதம் முடிந்த பின்னர், அதிகாலை நடைபெற்று வரும் விஐபி பிரேக் தரிசனத்தை சோதனை அடிப்படையில் தினமும் காலை 10 மணியில் இருந்து 12 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால், இரவில் கியூ காம்ப்ளக்ஸில் காத்திருக்கும் சாமானிய பக்தர்கள் காலை முதலே சுவாமியை தரிசித்து ஊர் திரும்ப வசதியாக இருக்கும். இதேபோல சர்வ தரிசன டோக்கன் முறையும் புரட்டாசி மாதம் முடிந்த பின்னர் வழங்கப்படும். தினமும் 20 ஆயிரம் டோக்கன்கள் வீதம் திருப்பதியில் சர்வ தரிசன டோக்கன்களை பெற்றுக்கொண்டு, அருகில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்து விட்டு, அதன் பின்னர், திருமலைக்கு வந்து சுவாமியையும் தரிசித்து விட்டு ஊர் திரும்பலாம்.
அதே சமயம், டோக்கன்கள் ஏதும் இன்றி நேரடியாக திருமலைக்கு வந்தும் சர்வ தரிசனம் மூலம் பக்தர்கள் சுவாமியை தரிசிக்கலாம். இதேபோல், புரட்டாசி மாதத்துக்கு பின்னர், திருமலையில் தங்கும் அறை களுக்காக டிக்கெட்கள் அல்லது டோக்கன்கள் திருப்பதியிலேயே வழங்க ஏற்பாடு செய்யப்படும்.
திருமலையில் தங்கும் அறைகள் தேவைப்படும் பக்தர்கள் திருப்பதியிலேயே டோக்கன் பெற்று கொள்ளலாம். ஒருவேளை கிடைக்காவிட்டால், திருப்பதியில் உள்ள தேவஸ்தான விடுதிகள் அல்லது தனியார் லாட்ஜ்களில் தங்கலாம். இதற்காக திருமலைக்கு வரும் அவசியம் இருக்காது.
ஏழுமலையானின் சொத்து மதிப்பை தொடர்ந்து 3 ஆண்டுகளாக ஆன்லைன் மூலம் வெளியிடுகிறோம். அதன்படி, திருப்பதி ஏழுமலையானுக்கு நாடு முழுவதும் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் நிலம், வீட்டு மனை போன்ற அசையா சொத்துகள் உள்ளன. அதன்படி சுவாமிக்கு மொத்தம் 960 அசையா சொத்துகள் உள்ளன. மொத்தம் 7,123 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த அசையா சொத்துகளின் இன்றைய மதிப்பு ரூ.85,705 கோடியாகும்.
தேவஸ்தான ஊழியர்களுக்கு ஏற்கெனவே 300 ஏக்கரில் வீட்டுமனைகள் ரூ.60 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ளன. தற்போது திருப்பதி தனி மாவட்டமானதால், கூடுதலாக மேலும் 132 ஏக்கர் நிலம் வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.25 கோடியாகும். விரைவில் தேவஸ்தான ஊழியர்களுக்கு வீட்டு மனைகள் வழங்கப்படும். இவ்வாறு ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்தார்.